வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவை மிக நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இதனிடையே, விக்ரம் லேண்டரின் வேகம் மாற்றியமைக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தியது. இந்த விண்கலம் மூன்று பிரிவுகளை கொண்டதாகும். ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலன், ‘லேண்டர்’ எனப்படும் நிலவில் தரையிறங்கும் சாதனம், ‘ரோவர்’ எனப்படும் நிலவில் ஆய்வு செய்யும் வாகனம் அடங்கியதே சந்திரயான் – 3 விண்கலமாகும். இதில் உந்து கலனுக்குள் லேண்டர் சாதனமும், லேண்டர் சாதனத்துக்குள் ரோவர் வாகனமும் இடம்பெற்றுள்ளன.
பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, கடந்த, 5ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவை சுற்றி வருவதற்கான துாரத்தை மாற்றி அமைக்கும் முயற்சிகள், 6, 9, 14 மற்றும் 16ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்டன. அடுத்தகட்டமாக, சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ள லேண்டர் சாதனம் தனியாக பிரிந்து செல்லும் நடவடிக்கை நேற்று (ஆக.,17) மேற்கொள்ளப்பட்டது. பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள ரோவர் வாகனத்தை சுமந்துள்ள விக்ரம் லேண்டர் சாதனம் நேற்று வெற்றிகரமாக பிரிந்தது.
இதுவரை லேண்டர் சாதனத்தை இயக்கி வந்த உந்து கலன், இனி நிலவைச் சுற்றி வந்து தன் ஆய்வை மேற்கொள்ளும். இதில் உள்ள சிறப்பு தொலைநோக்கி, பூமி குறித்து ஆய்வு செய்யும். இந்த நிலையில் சந்திரயான் லேண்டர் ஆக.,15 மற்றும் ஆக.,17ம் தேதிகளில் நிலவை மிக நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகியுள்ளது.
வேகம் குறைப்பு
விக்ரம் லேண்டரின் உயரத்தை இஸ்ரோ குறைத்துள்ளது. நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள லேண்டரின் உயரம் 113 * 157 கி.மீ., வரை குறைக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக உயரத்தை குறைக்கும் பணி ஆக.,20ம் தேதி அதிகாலை 2 மணிக்கு நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement