யோகி ஆதித்யாநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கும் ரஜினி – பட வசூல் பற்றி அவரே சொன்ன தகவல்!

உத்தர பிரதேசத்தில் நாளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் சந்திக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் குறித்து பாசிட்டிவான கமெண்ட்ஸ் வந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிசில் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.

கொரோனா தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னதாக கடந்த 9ஆம் தேதி ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணமாக புறப்பட்டுச் சென்றார்.

உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்குச் சென்ற அவர், பாண்டவ்கோலியில் உள்ள குகையில் தியானம் செய்தார். மேலும் ரிஷிகேஷ், துவாரகா உள்ளிட்ட இடங்களிலும் சென்று தரிசனம் செய்தார். இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு இன்று சென்ற ரஜினிகாந்த், சின்னமாஸ்தா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பல ஆண்டுகளாக சின்னமாஸ்தா கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன், இந்த முறை அங்கு சென்றது மிகவும் நன்றாக இருந்தது என பேட்டியளித்தார்.

ராஞ்சியில் உள்ள யாகோடா ஆசிரமத்தில் ஒரு மணி நேரம் தியானமும் செய்தார். அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார். பின்னர் விமானம் மூலம் புறப்பட்டு உத்தர பிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்தார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் உத்தர பிரதேச முதல்வரை சந்திக்கும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினியோ, “ஆமாம், யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து என்னுடைய ஜெயிலர் திரைப்படத்தை நாளை பார்க்க உள்ளேன்” என்றார். ஜெயிலர் படம் வசூலை குவித்து வருவது குறித்த கேள்விக்கு, அது கடவுளின் ஆசிர்வாதம் என்றும் பதிலளித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

நாளை முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை சந்தித்துப் பேசும் ரஜினிகாந்த் அவருடன் இணைந்து படம் பார்த்த பிறகு லக்னோவில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.