கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில், சீலிங் ஃபேனில் தற்கொலை தடுப்பு சாதனத்தை பொருத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்கொலையை தடுக்கும் வகையில் கல்லூரி விடுதிகளில் ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகளில் பொருத்தப்பட்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐஐடி – ஜேஇஇ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படிப்பதுண்டு. இந்நிலையில், நேற்றிரவு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டுவந்த 18 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது இந்த ஆகஸ்ட் தொடங்கியதிலிருந்து 4-வது தற்கொலை சம்பவமாகும். 2023 தொடங்கியதிலிருந்து இதுபோல் பயிற்சி மாணவர்கள் 21 பேர் தற்கொலையால் இறந்துள்ளனர்.
மனநல ஆலோசனை: மாணவர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்துவரும் சூழலில் கோட்டா மாவட்ட ஆட்சியர் ஓபி புங்கார் கூறுகையில், மாணவர்களின் மனநலனைக் கண்காணிக்கும் வகையில் கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மனநல சோதனை தேர்வுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்படும். அதன் அடிப்படையில் மன அழுத்தம் அதிகம் உள்ள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இதனிடையே தான், தற்கொலையை தடுக்கும் வகையில் கல்லூரி விடுதிகளில் ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.