புதுடெல்லி: ரஜினியின் பாட்ஷா படத்திற்கு பிறகு அவரது ‘ஜெயிலர்’ திரைப்படம் அதிக பிரபலம் அடைந்து வருகிறது. இந்த மகிழ்ச்சியில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி தனது நண்பர்களுடன் ஆகஸ்ட் 9-ல் இமயமலைக்கு புறப்பட்டார். இங்கு பத்ரிநாத், பாபா குகை உள்ளிட்ட முக்கிய இடங்களை தரிசித்தார்.
இதையடுத்து அவர் ஜார்க்கண்ட் மாநிலம் சென்று அங்கு தமிழரான ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். சின்னமஸ்தா எனும் இடத்திலுள்ள சக்தி பீடமான காளி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் உ.பி. தலைநகர் லக்னோ வந்து சேர்ந்தார்.
உ.பி.யில் ரஜினியின் மூன்றுநாள் பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விட்டது. லக்னோ விமான நிலையம் முதல் திரும்பச்செல்லும் வரை அரசுத் தரப்பு சிறப்பு மரியாதை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. லக்னோவில் தாஜ் நட்சத்திர ஓட்டலில் ரஜினி நண்பர்களுடன் தங்கியுள்ளார்.
அவர் நேற்று காலை லக்னோவில் உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேலை அவரது மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினி, “லக்னோ மிகவும் நன்றாக உள்ளது. எனது திரைப்படத்தை முதல்வருக்கு காண்பிக்கவே வந்துள்ளேன். நாளை ராமரை தரிசிக்க அயோத்தி செல்கிறேன். எல்லாம் கடவுள் அருள்” என்றார்.
இதனிடையே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே திட்டமிட்டபடி சில நிகழ்ச்சிகளுக்காக நேற்று அயோத்தி சென்றிருந்தார். அவர் லக்னோ திரும்ப தாமதமானது. இதனால் முதல்வருடன் சேர்ந்து ரஜினியால் படம் பார்க்க முடியாமல் போனது. இந்த நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து ரஜினியின் மனைவி லதாவும் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். இருவரும் லக்னோவின் பிவிஆர் தியேட்டரில் உ.பி.யின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் ‘ஜெயிலர்’ சிறப்புக் காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
எனினும் ரஜினி மற்றும் அவரது மனைவி லதாவை முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வீட்டுக்கு அழைத்துப் பேசினார். அப்போது, முதல்வர் யோகியின் காலில் விழுந்து வணங்கிய ரஜினி அவருக்கு பூங்கொத்து அளித்தார்.
உ.பி.யில் மூன்றாவது நாள் பயணமாக இன்று, ரஜினி முதன்முறையாக தனது மனைவி லதாவுடன் அயோத்தி செல்கிறார். இங்கு புதிதாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் தரிசனம் செய்து அந்த நகரிலுள்ள அனுமர் மடம் உள்ளிட்ட சிலவற்றை பார்வையிடுகிறார். அயோத்தி ராமர் கோயிலை தரிசிக்கும் தமிழகத்தின் முதல் பிரபலமாக ரஜினி கருதப்படுகிறார். ஏற்கெனவே, பாஜகவின் அரசியலில் முக்கிய இடம்பெற்றுள்ள ராமர் கோயிலுக்கு ரஜினி வந்ததால் அதன் பலனை மக்களவை தேர்தலிலும் பெற அக்கட்சி முயற்சிசெய்யும் வாய்ப்புகளும் உள்ளன.
உ.பி.யில் முதல்வர் யோகி திரைப்படங்களைக் காண்பது புதிதல்ல. கடைசியாக அவர், சர்ச்சைக்குரிய ‘கேரளா ஸ்டோரி’ அதற்குமுன் அக் ஷய் குமாரின் ‘சாம்ராட் பிருதிவிராஜ்’ ஆகிய திரைப்படங்களை பார்த்திருந்தார். இந்த இரண்டுக்குமே உ.பி.யில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்தவ கையில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திற்கும் வரிவிலக்கு அளிக்க மவுரியா பரிந்துரைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.