நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் பேன் இந்தியா ரிலீஸாக இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் `கிங் ஆஃப் கோதா’. பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கேங்ஸ்டர் நாயகனாக துல்கர் நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள் இங்கே…
“இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் பேப்பர்ல நிறைய டீடெய்லிங் இருக்கு. ராஜூக்கு (நாயகன்) ஒரு பேக் ஸ்டோரி இருக்கு. எனக்கு இந்த ஸ்டோரி கேட்டவுடன் என்னுடைய நார்மல் வாழ்க்கையில நான் பண்ற விஷயங்களுக்கு எதிர்மறையான விஷயங்கள் பண்ற ஒரு கேரக்டர்ல நடிச்சா எப்படி இருக்கும் அப்படின்னுதான் தோணுச்சு. அப்படித்தான் இதை மைண்ட்ல வெச்சிட்டு நடிச்சேன்.
படத்தோட ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி. இவங்க கூட நடிக்கிறதுக்குக் கொஞ்சம் தனியா தயாராகிட்டுதான் வந்தேன். கொஞ்சம் பயம் இருந்தது. ஏன்னா, மணிரத்னம் சார் படத்தில் நடிச்சு இருக்காங்க. அதுவும் முக்கியமான ரோலில் கார்த்தி, விக்ரம், பிரபு சார் எல்லார் கூடவும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. இதனால், நாம எங்கயும் கொஞ்சம் கூட சொதப்பிடக் கூடாதுன்னுதான் நடிக்கவே போனேன். ஐஸ்வர்யா, தாரா எனும் கேரக்டரில் நடிச்சிருக்காங்க. இந்த கேரக்டர் பெயர் தமிழ் நாட்டுல ரொம்ப பேமஸ். ‘ஓகே கண்மணி’ தாரா! புரோமோஷன் நேரத்தில் எல்லாரும் ‘தாரா’ கேரக்டர் பத்தி கேட்குறாங்க. ஆனா, எனக்கு ஸ்பாட்ல எங்கயும் ‘ஓகே கண்மணி’ தாரா ஞாபகத்துக்கு வரவே இல்லை. இந்த ராஜூவின் தாரா மட்டும்தான் ஞாபகத்துல இருந்தாங்க!” என்றவர் நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார்.
உங்க அப்பா மம்மூட்டி நிறைய கேங்ஸ்டர் படங்களில் நடிச்சிருக்கார். இந்தப் படம் பண்றப்ப, அதுல உங்களுக்கு எந்தப் படம் ஞாபகத்துக்கு வந்தது?
“அப்பாவுடைய எல்லா கேங்ஸ்டர் படமும் எனக்குப் பிடிக்கும். சமீபத்தில் ரிலீஸான ‘பீஷ்மபர்வம்’ உட்பட! கேங்ஸ்டர் கதை, அப்பா நல்லா நடிச்சிருப்பார். தமிழ்ல அப்பா பண்ணுன ‘தளபதி’யும் கேங்ஸ்டர் படம்தான். அதுல ரொம்பவே மறக்க முடியாத கேரக்டர் பண்ணியிருந்தார். நிறைய கேங்ஸ்டர் படங்கள் பண்ணியிருந்தாலும் அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்துவம் கொடுத்துத்தான் நடிச்சிருப்பார்.”
இந்தப் படத்துல ‘டான்ஸிங் ரோஸ்’ சபீர் முக்கியமான ரோல் பண்ணிருக்கார். அவர் இதுக்கு முன்னாடி நடிச்ச ‘சார்பட்டா பரம்பரை’ பார்த்தீங்களா?
“கண்டிப்பாக! சபீர், இதுல கண்ணன் அப்படிங்கற கேரக்டர் பண்ணியிருக்கார். இந்த கேரக்டருக்கு முதலில் வேறொரு ஆர்டிஸ்ட்டின் பெயர்தான் பரிந்துரையிலிருந்தது. எனக்கு கண்ணன் கேரக்டர் சபீர் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. நான் நினைச்ச மாதிரியே சபீர் இதுல நல்லா நடிச்சிருக்கார். ஸ்பாட்ல அவருடைய நடிப்பைப் பார்த்துட்டு ரூமுக்குப் போனதுக்கு அப்புறம் மெசேஜ் அனுப்புவேன். ரொம்ப புகழ்ந்து, நடிப்பைப் பாராட்டி அனுப்பியிருப்பேன். ஏன்னா, இவ்வளவு நல்ல அர்ப்பணிப்பை நான் எதிர்பார்க்கல. டூப் இல்லாமல் நானே நடிக்கிறேன்னு சொல்லுவார். ‘கோ ஆக்டர்’ எனும் முறையில் இது ரொம்ப உதவியா இருந்தது. புரொடக்ஷன்ஸ் பக்கத்திலிருந்து பார்த்தாலும் ரொம்ப வசதியா இருந்தார். ரொம்ப அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கார். நல்ல நடிகர்!”
தமிழில், உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கேங்ஸ்டர் படங்கள் என்னென்ன?
“‘வடசென்னை’, ‘நாயகன்’, ‘சுப்ரமணியபுரம்’. தமிழில் நிறைய கேங்ஸ்டர் படங்கள் வந்திருக்கு. ரொம்ப நல்ல ஸ்கிரீன்ப்ளே பண்ணியிருக்காங்க. இங்கே, தமிழில் நிறைய கேங்ஸ்டர் கதைகள் சொல்றதுக்கான வெளி இருக்கு. லைக், சென்னையை மையமா வெச்ச கேங்ஸ்டர் கதைகள்ன்னு அடுக்கிட்டே போகலாம். அதே மாதிரி உண்மையா நடந்த கதைகள் நிறையா எடுத்திருக்காங்க. ஸ்கிரீன்ல வர்ற ஒருத்தர் பயந்தா, அந்தப் பயம் படம் பார்க்கும் நமக்கும் இருக்கும். அந்தளவுக்கு கேங்ஸ்டர் கதைகள் இங்கே இருக்கு!”
தமிழில் கேங்ஸ்டர் கதைகள் உங்களைத் தேடி வந்தால் நடிக்க ரெடியா இருக்கீங்களா?
“கண்டிப்பாக… அதுக்குன்னு தனியா தயார் ஆவேன். நிச்சயம் சும்மா போயிட்டு நடிக்க மாட்டேன். பாடி லாங்குவேஜ்ல இருந்து எல்லாமே சரி பண்ணிட்டு நல்லா ட்ரெயின் ஆகிட்டுதான் நடிப்பேன். இந்த பிராசஸுக்கு யாராவது எனக்கு சப்போர்ட் பண்ணனும். அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கற மாதிரி நடிப்பேன்!”
மலையாள நடிகர்கள், தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டர்கள் பண்ற இந்த சீசனை நீங்கள் எப்படிப் பார்க்குறீங்க?
“ஹீரோ, வில்லன் இப்படி எப்போதும் நான் பிரித்துப் பார்க்க மாட்டேன். ரொம்ப நல்ல ரோலா இருக்கா, இன்ட்ரஸ்ட்டா இருக்கா, இது மட்டும் பார்த்தா போதும். நம்ம பண்ற ரோல் எப்பவும் நிலைச்சிருந்தா போதும். ஒரு ரோலில் நடிக்கும் போது அதை நாம என்ஜாய் பண்ணணும். இங்கே, தமிழ் சினிமாவுல வில்லனா நடிச்சிருந்த எல்லா மலையாள நடிகர்களும் நல்லாப் பண்ணியிருந்தாங்க. எனக்கு ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்தா, நிச்சயம் தமிழில் யார் கூட வேணும்னாலும் வில்லனாக நடிப்பேன்.”
துல்கர் சல்மான் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியின் முழுப்பேட்டியைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.