ஸ்டாலின் போட்ட உத்தரவு: ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைஞர் நினைவு சின்னம்!

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் கோட்டம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் திமுகவினராலும் தமிழக அரசாலும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன வகைகளில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னெடுக்கலாம் என்பது குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதலமைச்சர்

இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. அவரைப் பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அறிவித்து நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், இந்த விழாக்கள் அமைய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெரிய அளவிலான ஆடம்பர நிகழ்ச்சிகளாக அல்லாமல் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளாக இவற்றை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவினை அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாகவும் அமைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா

ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே 22ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள் தலைமையில் 12 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் இதுவரை 4 கூட்டங்கள் நடத்தப்பட்டு, அரசின் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் அமைச்சர்கள் தலைமையிலான 12 குழுக்களிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டு, மாநில, மாவட்ட அளவிலான பல்வேறு நிகழ்வுகளை நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கலைஞர் செம்மொழி பூங்காவிற்கும், சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கும் விரைவில் அடிக்கல் நாட்டிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கலைஞரைப் பற்றிய 100 பக்க வரலாறு வெளியிட்டு, அவற்றை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும், இளைய தலைமுறையிடம் கலைஞரின் ஆளுமையை வெளிப்படுத்துவதே அதன் நோக்கமாக அமைய வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.