பழனிசாமிக்கு துரோகத் தமிழர் பட்டம் கொடுக்கலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மதுரையில் பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு இல்லை. வீழ்ச்சி மாநாடாகும். அந்த மாநாட்டில் அதிகபட்சமாக 2.50 லட்சம் பேர் தான் கலந்துகொண்டுள்ளனர்.
பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கியுள்ளனர். இதனால் புரட்சி என்ற வார்த்தைக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது. அவருக்கு துரோகத் தமிழர் என்று பட்டம் கொடுக்கலாம்.
தான் செய்த துரோகத்தாலும், தவறாக ஈட்டிய பணப் பலத்தாலும், கட்சியை கபளீகரம் செய்ததுதான் அவர் செய்த புரட்சி. முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. இவர்களுக்கு மாற்றுக் கட்சியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது யாருடன் கூட்டணி என சரியான நேரத்தில் முடிவெடுப்போம். கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிடுவோம். கூட்டணி அமையும்பட்சத்தில் தேசிய கட்சி தலைமையில் தேர்தலைச் சந்திப்போம்.
எங்களைப் பொறுத்தவரை திமுக எந்த விதத்திலும் வெற்றிபெறக் கூடாது. திமுகவை தோற்கடிக்கும் கூட்டணியில் நாங்கள் இணைவதற்கு தயாராக உள்ளோம்.
காவிரி பிரச்சினையில் தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வர் வேகமாகச் செயல்பட்டு, மத்திய அரசுடன் சேர்ந்து, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஓபிஎஸ்ஸும், நானும் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றோம். வருங்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் எனத் தெரிவித்தார்.