`சந்திரயான் 3' திட்டத்தைக் கிண்டல் செய்தாரா பிரகாஷ் ராஜ்? இந்து அமைப்புகளின் கோபமும் பின்னணியும்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்து முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ்.

திரைத்துறைத் தாண்டி அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்துத் தொடர்ந்து பேசுவதையும், தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

குறிப்பாக, இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்து, பத்திரிகைகளில் எழுதி வந்த இவரது தோழியும், பத்திரிகையாளருமான கெளரி லங்கேஷின் படுகொலைக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசி வருகிறார் பிரகாஷ் ராஜ். இதனால் அவ்வப்போது பல்வேறு பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் எழுந்த வண்ணமிருக்கின்றன.

இந்நிலையில் நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக விண்ணில் அனுப்பப்பட்டுள்ள ‘சந்திரயான் 3’ திட்டத்தைக் குறிப்பிடும் வகையில், “வாவ்… நிலவிலிருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்” என கேப்ஷன் பதிவிட்டு ஒரு கார்ட்டூனைப் பதிவிட்டு இருக்கிறார். #justasking என்ற ஹேஷ்டேக்குடன் இதைப் பதிவிட்டிருந்தார்.

அவர் பகிர்ந்த அந்த கார்ட்டூனில் ஒருவர் டீ ஆற்றுவதுபோல வரையப்பட்டிருந்தது. சிலர் இதைக் குறிப்பிட்டு “இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவனைத்தான் பிரகாஷ் ராஜ் கிண்டல் செய்கிறார். ‘சந்திரயான் 3’ திட்டத்தைக் கிண்டல் செய்கிறார்” என்று கடும் விமர்சனங்களைத் தெரிவித்திருந்தனர். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரகாஷ் ராஜ் பகிர்ந்த புகைப்படம்

இதையடுத்து பிரகாஷ் ராஜ் இந்தச் சர்ச்சைகள் குறித்து, “வெறுப்பைப் பார்ப்பவர்களுக்கு வெறுப்புதான் தெரியும். நான் ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவை ஒன்றைக் குறிப்பிட்டு கேரளா சாய்வாலாவைக் கொண்டாடும் விதமாகத்தான் இதைப் பதிவிட்டேன். நகைச்சுவையை நகைச்சுவையாகப் பாருங்கள், இல்லையெனில் உங்களிடம்தான் ஏதோ பிரச்னையிருக்கிறது” என்று விளக்கமளித்திருந்தார்.

அதன்பிறகுப் பலரும், “பிரகாஷ் ராஜ், கேரளாவை விட்டு வெளியேறி வெவ்வேறு மாநிலங்களில் டீ கடைகள் வைத்திருக்கும் கேரள மலையாளிகள் (சாய் வாலாக்கள்), நிலவிற்கும் சென்று டீ கடை நடத்துவதுபோன்ற நகைச்சுவை வீடியோ ஒன்றைத்தான் குறிப்பிட்டார். மற்றபடி அவர், ‘சந்திரயான் 3’ ஆராய்ச்சியையோ அல்லது தனிப்பட்ட யாரையும் கிண்டல் செய்யவில்லை” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து இப்பிரச்னையின் தீவிரம் குறைந்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ், சந்திரயான் – 3 திட்டம் குறித்துக் கிண்டலாக ட்வீட் செய்ததாக இந்து அமைப்புகளின் தலைவர்கள் சிலர் பிரகாஷ் ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளனர். இதனால் இப்பிரச்னை மீண்டும் பூதாகரமாகி வருகிறது.

இந்த விவகாரத்தில் பிரகாஷ் ராஜிற்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அவரின் இந்த ட்விட்டர் பதிவு பற்றிய உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.