பெங்களூருவிற்கு வந்த பெரிய சிக்கல்… தண்ணீ, தண்ணீ… வறண்டு போகும் ஏரிகள்… இப்படியே போனா?

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெங்களூரு மாநகரம் தென்மேற்கு பருவமழையில் தத்தளிக்கும். அந்த அளவிற்கு மழை கொட்டித் தீர்த்து அடுத்து வரும் மாதங்களின் தேவையை பூர்த்தி செய்ய பெரிதும் உதவிகரமாக இருக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் நீர்நிலைகள் நிரம்பி விடும். குடிநீர் பிரச்சினை இருக்காது. விவசாயம் செழிக்கும். ஆனால் நடப்பாண்டு பருவமழை காலம் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதம் போதிய மழை பெய்யவில்லை.

பெங்களூரு நிலவரம்

லால் பாக் மலர் கண்காட்சியை பராமரிக்க முடியாமல் ஊழியர்கள் தவித்ததில் இருந்தே, இதனை புரிந்து கொள்ளலாம். இந்நிலையில் பெங்களூருவின் தற்போதைய நிலவரம் மிகவும் கவலையளிக்கிறது. ஏனெனில், பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் 46 ஏரிகளும், கிராமப்புற மாவட்டத்தில் 98 ஏரிகளும் இருக்கின்றன. இவை ஒவ்வொரு ஆண்டும் 5 டி.எம்.சி தண்ணீரை கொண்டிருக்கிருக்கும். நடப்பு சீசனை கவனித்தால் 11 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

நீர்நிலைகளில் வறட்சி

சுமார் 50 ஏரிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான தண்ணீரே உள்ளது. 43 ஏரிகளில் கிட்டதட்ட பாதியளவு தண்ணீர் இருக்கிறது. வழக்கமாக ஆகஸ்ட் 4வது வாரத்தில் 75 சதவீத அளவிற்கு ஏரிகள் நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படியில்லை. இதன் காரணமாக நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக்கும் எனக் கூறுகின்றனர். குறிப்பாக விவசாயமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் கைகொடுக்குமா?

குறிப்பாக தெற்கு கர்நாடகா என்று எடுத்து கொண்டால் தென்மேற்கு பருவமழை அளித்த ஏமாற்றத்தால் நிலைமை மிக மோசமாக காணப்படுகிறது. ஒட்டுமொத்த கர்நாடகாவையும் எடுத்து கொண்டால் 10 சதவீத ஏரிகள் முழுவதுமாக வறண்டுள்ளன. 1000க்கும் மேற்பட்ட ஏரிகள் 30 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன. 700க்கும் மேற்பட்ட ஏரிகள் 50 சதவீதத்திற்கு கீழும் தண்ணீர் நிரம்பி காணப்படுகின்றன. எனவே செப்டம்பர் மாதத்தை நோக்கி கவனம் திரும்பியிருக்கிறது.

தண்ணீர் தேவை

அடுத்த மாதம் கனமழை பெய்தால் மட்டுமே நடப்பு சீசனை சமாளிக்க முடியும் என்கின்றனர். பெங்களூருவை பொறுத்தவரை காவிரி நீர் எந்த அளவிற்கு முக்கியமோ, அதேபோல் பருவமழையும் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு நகரின் தண்ணீர் தேவை பெரிதும் அதிகரித்து வருகிறது. கிட்டதட்ட இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்று கூட சொல்லலாம். இவற்றை பூர்த்தி செய்ய நீர்நிலைகள் நிரம்பியிருக்க வேண்டும்.

மாநில அரசு நடவடிக்கை

ஒருவாரத்திற்கு மேல் பருவமழை மிகவும் பலவீனமடைந்து காணப்படுகிறது. இப்படியே போனால் நீர்நிலைகளில் தற்போதுள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்துவிடும். இது அடுத்து வரும் மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும். எனவே கர்நாடகா மாநில அரசு தற்போதே விழித்து கொள்வது அவசியம். குறிப்பாக சிறிதளவு மழை பெய்தாலும் அவை நேரடியாக நீர்நிலைகளை சென்றடையும் வகையில் வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.