இஸ்லாமாபாத்: ”ராணுவம் தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை,” என, பாக்., அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசின் மீதான தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து, அவர் பதவி விலகினார். இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.
முரண்பாடு
இவரது ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு சில நாட்கள் முன், அந்நாட்டு பார்லி., கலைக்கப்பட்டதை அடுத்து, இடைக்கால பிரதமராக அன்வர் உல்ஹக் கக்கார் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், பார்லி., கலைக்கப்படுவதற்கு முன், அந்நாட்டு ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அரசு ரகசிய சட்ட திருத்த மசோதா, பாகிஸ்தான் ராணுவ சட்ட திருத்த மசோதா ஆகியவை, அதிபர் ஆரிப் ஆல்வியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காத அதிபர், அவற்றை திருப்பி அனுப்பினார்.
ஆனால், மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் சமீபத்தில் செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில், அதற்கு அதிபர் ஆரிப் ஆல்வி நேற்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
அரசு ரகசிய திருத்த மசோதா மற்றும் பாகிஸ்தான் ராணுவ திருத்த மசோதா ஆகியவற்றில் முரண்பாடு இருந்ததால், அவற்றிற்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை.
குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றை கையொப்பமின்றி திருப்பி அனுப்ப, என் அலுவலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டுஇருந்தேன். ஆனால், என் உத்தரவுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. இதற்கு இறைவனே சாட்சி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரகசிய சட்ட மசோதா
திருத்தப்பட்ட அரசு ரகசிய சட்டத்தின்படி, யாராவது வேண்டுமென்றே பொது இடையூறுகளை ஏற்படுத்தினாலோ, அரசுக்கு எதிராக செயல்பட்டாலோ அவர்கள் குற்றம் செய்ததாக கருதப்படுவர்.
அதேபோல், திருத்தப்பட்ட பாகிஸ்தான் ராணுவ ரகசிய சட்ட மசோதாவின்படி, ராணுவத்தைவிட்டு வெளியேறிய அதிகாரிகள், இரண்டு ஆண்டுகளுக்கு அரசியலில் பங்கேற்க முடியாது.
முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள், ராணுவத்தில் இருந்து வெளியேறிய ஐந்து ஆண்டுகளுக்கு பின்தான் அரசியலில் சேர முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்