புதுடெல்லி: குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமாகி உள்ளார். இதுகுறித்து, கடந்த 7-ம் தேதி உயர் நீதிமன்றத்தை அணுகி, கருவைக் கலைக்க அனுமதி கோரியுள்ளார்.
இவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு 8-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. 10-ம் தேதி மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனு மீதான விசாரணையை 23-ம் தேதிக்கு தள்ளி வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் முன்கூட்டியே கடந்த 17-ம் தேதி அந்தப் பெண்ணின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அந்தப் பெண் கடந்த 19-ம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளார். இவரது மனுவை அவசரமாக விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: திருமணம் செய்து கொண்ட பெண்களைப் பொருத்தவரை கர்ப்பம் தரிப்பது என்பது மகிழ்ச்சியான, கொண்டாடப்பட வேண்டிய விஷயம். ஆனால்,திருமண உறவுக்கு அப்பாற்பட்டு, பாலியல் வன்கொடுமை காரணமாக ஏற்படும் கர்ப்பம் காயம் போன்றது. மன வேதனையை தரக்கூடியது. அந்த காயம் பெண்ணுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலியை தரக்கூடியது.
மேற்கண்ட காரணங்களுக்காகவும் அவருடைய மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலும் அந்தப் பெண்ணின் 27 வார கருவை கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது. நாளையே அவர் மருத்துவமனைக்கு சென்று கருவை கலைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதேநேரம், கருவில் உள்ள குழந்தை உயிருடன் இருந்தால் அதைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். பின்னர் அந்தக் குழந்தையை சட்டப்படி தத்து கொடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்காமல் குஜராத் உயர் நீதிமன்றம் தாமதமாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.