சென்னை: தமிழகம் முழுவதும் காவலர்களின் நலன் காக்க வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து செயல்பட போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவு: தமிழ்நாடு காவலர் நலன் என்ற பெயரில் உருவாக்கப்படும் வாட்ஸ்அப் குழுவில் டிஜிபிஉள்ளிட்ட தலைமை போலீஸ் அதிகாரிகள் இருப்பார்கள். சென்னையில் இணை ஆணையர் (காவலர் நலன்) தலைமையில் வாட்ஸ்அப் குழு அமைத்து அதில் துணை ஆணையர்மற்றும் உதவி ஆணையர்களை குழுவில் இணைக்க வேண்டும்.
அதன்பிறகு துணையாக, இவர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குழு அமைத்து அதில்உதவி ஆணையர், ஆய்வாளர்கள் இருக்கவேண்டும். உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்படும் வாட்ஸ்அப் குழுவில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் எனகடைசி காவலர்கள் வரை இருக்க வேண்டும்.
மற்ற நகரங்களை பொருத்தவரையில் துணை ஆணையர் தலைமையில் வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டு உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். மாவட்டஅளவில் ஏடிஎஸ்பி தலைமையில் வாட்ஸ்அப்குழு அமைக்கப்பட்டு அதில் டிஎஸ்பி மற்றும்ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குழுவில் இருக்கவேண்டும். மற்ற நகரங்களிலும் மற்றும் மாவட்டங்களிலும் ஆய்வாளர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் கீழ் கடைசி காவலர்கள் வரை இணைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அமைக்கப்படும் வாட்ஸ்அப் குழுவில் இருந்து காவல்துறை நலன் சார்ந்து பதிவிடப்படும் பதிவுகள் மூலமாக உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவுக்கு பதிவுகள் அனுப்பப்பட வேண்டும். தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பதிவிடப்படும் காவலர் நலன் சார்ந்த பதிவுகள் உடனடியாக 30 நிமிடத்தில் அடுத்தடுத்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பப்பட வேண்டும். 4 மணி நேரத்துக்குள் அனைத்து காவலர்களும் அறிந்துகொள்ளும் வகையில் வாட்ஸ்அப் குழுக்களில் அது சென்றடைய வேண்டும். இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.