தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக்கோப்பை போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆகியோர் இறுதிச்சுற்றில் விளையாடுகிறார்கள். அதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்ததைத் தொடர்ந்து இன்று இரண்டாம் சுற்று நடைபெற்றது. இந்தச் சுற்றில் வெள்ளை காய்களைக் கொண்டு மேக்னஸ் கார்ல்சனும் கறுப்பு காய்களைக் கொண்டு பிரக்ஞானந்தாவும் விளையாடினார்கள். இந்தப் போட்டி எவ்வித சிக்கலுமின்றி சமனில் முடிந்தது.
மேக்னஸ் கார்ல்சன் இந்தச் சுற்றை சமன் செய்ய வேண்டும் என்று திட்டத்தோடுதான் விளையாடியுள்ளார் என்பது அவர் விளையாடிய விதத்திலிருந்தே தெரிந்தது.
இந்த செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாம் சுற்றைப் பார்த்த ஐந்து முறை உலக சாம்பியனான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்,
”மேக்னஸ் கார்ல்சன் இந்த ஓப்பனிங் விளையாடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. 2016 செஸ் உலகசாம்பியன் ஷிப்பில் 12-வது சுற்றில் ஆடிய ஓப்பனிங்கை கார்ல்சன் மீண்டும் ஒருமுறை ஆடியுள்ளார். டை-பிரேக்கரை எதிர்பார்த்து இதைச் செய்தாரா?” என்று ட்வீட் செய்துள்ளார்.
2016 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் செர்ஜி கர்ஜாகினிடம் விளையாடினார். அதில் 11 சுற்று முடிவில் இருவரும் தலா 5.5 புள்ளிகள் எடுத்திருந்தனர். யார் வெற்றியாளர் என்று நிர்ணயிக்கும் ஆட்டமாக 12-வது சுற்று இருந்தது. அதில் கார்ல்சன் தன் விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்பே அந்த ஆட்டத்தைச் சமன்செய்ய வேண்டும் என்று அதற்கு ஏற்றவரான ஓப்பனிங்கை ஆடி டை-பிரேக்கர் சுற்றுக்கு ஆட்டத்தைக் கொண்டு சென்றார். பின் டை-பிரேக்கரில் ஆட்டத்தை வென்று உலக சாம்பியன் ஆனார். இன்றும் அதேபோல் திட்டமிட்டு இந்த ஆட்டத்தையும் சமன் செய்துள்ளார் கார்ல்சன்.
2016-ல் விளையாடிய ஆட்டமும், இன்று விளையாடிய ஆட்டமும் ஓரளவு ஒன்றாக உள்ளது என்பதை மேற்கண்ட படங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம்.
உலகக்கோப்பை இறுதிச்சுற்றின் இரண்டாம் ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சன் வெள்ளை காய்களைக் கொண்டு விளையாடினார். அவர் தனது சிப்பாயை e4-ல் நகர்த்தி ஆட்டத்தைத் தொடங்கினார்.
அதற்கு பிரக்ஞானந்தா தனது சிப்பாயை e5-ல் நகர்த்தினார். இதை அவர்கள் நான்கு குதிரை ஓப்பனிங்கில், ஸ்பானிஷ் வேரியேசன் மூலம் இந்த ஆட்டத்தைக் கொண்டு சென்றார்கள்.
இந்த ஓப்பனிங்கில் அனைத்து காய்களையும் எளிதாக வெட்டிக்கொண்டு சமநிலையை அடைய முடியும். இதனால்தான் கார்ல்சன் இந்த ஓப்பனிங் விளையாடியுள்ளார். அவரின் தந்திரம் டை-பிரேக்கரில் ஆட்டத்தை வெல்லலாம் என்பதுதான். இந்த ஓப்பனிங்கை முன்னரே 2016 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சன் ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் செர்ஜி கர்ஜாகினிடம் 12-வது சுற்றில் ஆடி சமன் செய்தார். பிறகு டை-பிரேக்கரில் கார்ல்சன் வென்று மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.
பிறகு 30-வது மூவின் போது அனைத்து காய்களையும் வெட்டி, இறுதியில் இருவரிடமும் ராஜாக்கள், தலா ஒரு மந்திரி, தலா 6 சிப்பாய்கள் இருந்தபோது ஆட்டம் சமன் என்று ஒப்புக்கொண்டு முடித்தார்கள்.
இப்போது இரு ஆட்டமும் சமனில் முடிந்ததால் நாளை டை-பிரேக்கர் சுற்றுகள் நடைபெறும்.
டை-பிரேக்கரில் வெல்வாரா பிரக்ஞானந்தா?