பாகு: உலகக் கோப்பை செஸ் போட்டியில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். கடைசி வரை போராடி, டை பிரேக்கர் சுற்றில், இரண்டு முறையும் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
முதல் போட்டி
அஜர்பெய்ஜானில் உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் பைனலுக்கு உலகத் தரவரிசையில் 22வது இடத்திலுள்ள இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா 18, ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, உலகின் ‘நம்பர்-1’ வீரர், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் முன்னேறினர். பைனல், ‘கிளாசிக்கல்’ முறையில் (இரண்டு போட்டி) நடக்கிறது. முதல் 40 நகர்த்தலுக்கு இருவருக்கும் தலா 90 நிமிடம் தரப்பட்டன. இருவரும் மோதிய முதல் போட்டி 35 வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. 0.5-0.5 புள்ளி பகிர்ந்து தரப்பட்டன.
இரண்டாம் போட்டி
நேற்று பைனலின் இரண்டாவது போட்டி நடந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவும் சரியான பதிலடி தர, 12வது நகர்த்தலில் இருவரும் தங்களது ராணிகளை இழந்தனர். முதல் ஒரு மணி நேர முடிவில் ஆட்டம் சமநிலையில் தான் இருந்தது.
முதல் 22 நகர்த்தலில் இருவரும் சமநிலையில் நீடித்தனர். அடுத்த சில நகர்த்தலில் தங்களது யானைகளை இழக்க, போட்டி ‘டிராவை’ நோக்கிச் சென்றது. ஒரு மணி நேரம் 22 நிமிட முடிவில், 30 வது நகர்த்தலில் போட்டி ‘டிரா’ ஆனது. தற்போது இருவரும் 1.0-1.0 என சம நிலையில் உள்ளனர்.
டை பிரேக்கர் சுற்று
இதையடுத்து இன்று ‘டை பிரேக்கர்’ சுற்று துவங்கி நடந்தது. முதல் போட்டியில் வெள்ளை நிற காயங்களுடன் ஆட்டத்தை துவக்கினார் பிரக்ஞானந்தா. இதையடுத்து, உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்த தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முனைப்பு காட்டி ஆட்டம் ஆடினார்.
41வது நகர்த்தல் வரை இருவரும் சமநிலையில் இருந்தனர். கடைசி நேர நெருக்கடியில் பிரக்ஞானந்தா தவறு செய்ய, 47 வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார். பிரக்ஞானந்தா 1.0-2.0 என பின் தங்கினார்.
‘டை பிரேக்கரின்’ இரண்டாவது போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடினார். மறுபக்கம் கார்ல்சன் போட்டியை ‘டிரா’ செய்தால் போதும் என்ற நிலையில் களமிறங்கினார். வேறு வழியில்லாத நிலையில் 22வது நகர்த்தலில் போட்டியை ‘டிரா’ செய்ய இருவரும் சம்மதித்தனர்.
முடிவில் பிரக்ஞானந்தா 1.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடம் பிடித்தார். இதனால் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். இதனால் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி வரை நுழைந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வி அடைந்தார்.
பரிசு தொகை
உலக கோப்பை வென்ற கார்ல்சனுக்கு ரூ.91 லட்சமும், 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ.67 லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்