தேசிய விருதுகள் 2023: இங்கேயும் உங்க அரசியலா? தேர்வு குழுவுக்கு குட்டு வைத்த ஸ்டாலின்

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு விருது அளிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர் காட்டமான விமர்சித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் அறிவிக்கப்பட்டன. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் 6 தேசிய விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் பெற்றார். தமிழில் கடைசி விவசாயி திரைப்படத்துக்கு சிறந்த மாநில மொழி படத்துக்கான விருது கிடைத்தது. அப்படத்தில் விவசாயியாக நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு பரிசும் அறிவிக்கப்பட்டது.

இரவின் நிழல் படத்தில் பாடிய பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுதவிர ராக்கெட்ரி நம்பி, சார்லி 777, ஹோம் உள்ளிட்ட தமிழில் கவனம் ஈர்த்த திரைப்படங்களுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டன. எனினும் ஜெய்பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை, மாநாடு போன்ற திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்கலாம் என எதிர்பாத்த தமிழ் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதனிடையே தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெளியான போது பாஜகவினர் அதனை கொண்டாடித் தீர்த்தனர். அத்துடன், பாஜக ஆளும் மாநிலங்களில் அப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த படம் வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து வெளிப்படையாக விமர்சனக் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய விருதுகளில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள். மேலும், இரவின்நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது” என்றும் தி காஷ்மீர் பைல் படத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார் முதல்வர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.