மக்களவைத் தேர்தல் 2024 கருத்துக் கணிப்பு: ஆட்சியைப் பிடிப்பது யார்? மோடியை வீழ்த்துமா இந்தியா கூட்டணி?

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. 2014, 2019 ஆகிய இரு தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில் மூன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்து ஹாட்ரிக் அடிக்க பாஜக தயாராகி வருகிறது. பாஜகவை இதற்கு மேல் ஆட்சியில் இருக்க அனுமதிக்க கூடாது என்று நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் முக்கிய கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.

இந்தியா கூட்டணி விறு விறு!இந்தியா கூட்டணியின் இரு ஆலோசனைக் கூட்டங்கல் பாட்னாவிலும், பெங்களூரிலும் நடந்து முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இரு நாள்கள் மும்பையிலும் நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே அந்தந்த மாநிலங்களில் அவ்வளவு இணக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் குறைந்த பட்ச செயல்திட்டம் வகுத்து பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவெடுத்து வேகம் கூட்டி வருகின்றன.
பாஜக கூட்டணி கணக்கு!பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் நடத்தியுள்ள நிலையில் தனது தலைமையில் மேலும் சில கட்சிகளை இணைக்க மாநிலம் வாரியாக காய் நகர்த்தி வருகிறது. ஆதரவு உள்ள மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தினாலே மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது.
கருத்துக் கணிப்பு முடிவுகள்எதிர்கட்சிகளின் கூட்டணி பாஜகவை வீழ்த்த போதுமானதாக இருக்கிறதா, அது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள், கூட்டணியின் பெயருக்கான வரவேற்பு எப்படி உள்ளது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கான ஆதரவு எப்படி உள்ளது ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பது குறித்து இந்தியா டுடே- சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா கூட்டணிக்கு வரவேற்பு எப்படி?இந்தியா கூட்டணியின் பெயர் வாக்குகளை பெறுவதற்கான காரணமாக இருக்கும் என்று 39 சதவீதம் பேரும், கூட்டணியின் பெயர் வாக்குகளை பெற்றுத் தராது என 30 சதவீதம் பேரும், கவர்ச்சியான பெயரும் அல்ல அதனால் வாக்குகளை பெறவும் முடியாது என்று 18 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடியை வீழ்த்துமா?இந்தியா கூட்டணியில் பிரபலமான பல தலைவர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கிடையேயான பிணைப்பு, இணக்கம் என்பது உறுதியாக கூற முடியாத சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் பாஜகவை இந்தியா கூட்டணி வீழ்த்தும் என்று 33 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவை இந்தியா கூட்டணியால் வீழ்த்த முடியாது என்று 54 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
யாருக்கு எத்தனை இடங்கள்?இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்த முடிவுகளும் வெளியாகியுள்ளன. இந்தியா டுடே – சிவோட்டர் கருத்து கணிப்பின் படி இப்போது தேர்தல் நடந்தால் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 193 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 44 தொகுதிகளைப் பெறுவார்கள்.
கடைசி நேர ட்விஸ்ட் – ஏழு மாதத்தில் நடக்கும் மாற்றம்!அதேசமயம் தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த தேர்தலில் 357 இடங்களில் வென்றிருந்தது. தற்போது 306 இடங்கள் தான் வெற்றி பெறும் என்று கூறப்படுவதால் அந்த கூட்டணியும் சில இடங்களில் தொகுதிகளை இழக்கும். எதிர்கட்சிகள் கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் கருத்துக் கணிப்பில் 153 இடங்கள் வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் அது 193 ஆக அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் முழுதாக ஏழு மாதங்கள் உள்ள நிலையில் தற்போதைய கருத்துக் கணிப்பு முடிவில் பெரிய மாற்றம் ஏற்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.