விஜயகாந்த் 80களின் தொடக்கத்தில் பாண்டி பஜார் ரோகிணி லாட்ஜில் தங்கி கொண்டு பெல்பாட்டம் பேண்ட்டும், மடித்துவிட்ட முழுக்கை சட்டையோடு ஜாவாவில் ஓயாது சினிமா வாய்ப்பை தேடிக் கொண்டிருந்த விஜயகாந்தை அன்றைய சினிமா வாய்ப்பு தேடுபவர்கள் பலரும் பார்த்திருக்கக்கூடும்.
நண்பன் இப்ராஹிம் துணையிருக்க தமிழ் சினிமாவில் அவர் காலூன்றியது தனி வரலாறு. கமல், ரஜினி எனத் தொடங்கி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் உள்ளூர் இளைஞன் போல் காரசாரமாக களத்தில் இறங்கினார் விஜயகாந்த்.
`ஆஹா… நம்ம ஆளுய்யா!’ என்று மனம் வந்து ஏற்றுக் கொண்டார்கள் தமிழ் ரசிகர்கள். தனக்கென ஸ்டைல், பவுடர் பூச்சு இல்லாத பேச்சு, முரட்டு சண்டை, பக்கத்து வீட்டு இளைஞன் என்கிற மாதிரியே ஒட்டிக் கொண்டார் விஜயகாந்த். கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றியவர் கேட்பாரற்று இருந்த திரைப்பட கல்லூரி மாணவர்களை வாரி அணைத்து வாய்ப்புக் கொடுத்து வெளியே கொண்டு வந்தார்.
புதுக்கதை புது வண்ணம் என வித்தியாசம் பார்த்தது தமிழ் சினிமா. படப்பிடிப்பு சமயத்தில் தனக்கு அளிக்கிற உணவையே கடைகோடி ஊழியன் வரைக்கும் அளித்து சமத்துவம் போற்றினார் விஜயகாந்த். `அந்த மனசுதான் கேப்டன்!’ என நெகிழ்ந்தனர் தொழிலாளர்கள். அடுத்த அவதாரம் நடிகர் சங்கம். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்கத்தை அதிலிருந்து மீட்டது பெரும் சாதனை. ஆயிரம் கருத்து வேறுபாடுகளோடு இருந்த நடிகர்களை கட்டுப்பாட்டோடு அள்ளிக் கொண்டு மலேசியா வரைக்கும் கொண்டுப் போய் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கடன் தீர்த்தார்.
மேற்கொண்டு நடிகர் சங்கத்தின் சேமிப்பிலும் பணம் வைத்துவிட்டு கேப்டன் அடுத்து வந்தது அரசியல்.
சொன்னபடியே விஜயகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்த போது டீக்கடையிலிருந்து பத்திரிக்கை எடிட்டோரியல் வரை எழுந்த ஒரே கேள்வி இது மட்டும்தான்…… பார்ட்டி தாக்கு பிடிப்பாரா…?
ஆனால் அதிலும் சொன்னபடி ஆச்சர்யத்தை நடத்திக் காட்டினார் தே.மு.தி.க தலைவர். முதல் தேர்தலிலேயே அவர் 28 லட்சம் ஓட்டுக்களை வேட்டையாடி சேர்த்தபோது எல்லோரும் சிந்தித்தார்கள். மாம்பழத்தின் கோட்டையான விருத்தாச்சலத்திலேயே புகுந்து வெற்றிக்கனி தட்டியதில் அத்தனை கட்சிகளுக்கும் அலாரம் செட் பண்ணினார். ஆரம்பத்தில் அவருக்கெல்லாம் என்னய்யா அரசியல் தெரியும் என்ற கருணாநிதியே குறிப்பிடத்தக்க வளர்ச்சி என சர்டிபிகேட் கொடுத்தார். தமிழக அரசியலை பலமாக பிடித்து இழுத்தது விஜயகாந்தம்.
எல்லோரும் பயந்து நடுங்கிய ஜெயலலிதாவிடமே சட்டமன்றத்தில் நேருக்கு நேராக துணிச்சலாக விவாதம் செய்தார். `கூட்டணி வைத்து தவறு செய்து விட்டேன்’ எனக் குமுறினார் ஜெ. தெருவில் வந்து இறங்கும் துணிவும், இறங்கி உதவும் கனிவுமே விஜயகாந்தின் வெற்றியின் ரகசியமாய் இருந்தது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி விஜயகாந்தின் அதிரடி ஆளுமைக்கே அப்ளாஸ் அதிகம். அரசியலில் யாரும் கணிக்க முடியாத, பகிரக பரமபதம். விஜயகாந்த் பேட்டி என்றால் அது நிரூபருக்கும், மீடியாவுக்கும், மக்களுக்கும் சரி நல்ல தீனி.
ஒரு சாமான்யனாக சினிமாவுக்குள் வந்து சாதித்த பின்னணி, தமிழக அரசியலையே ஒரு காலக்கட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த துணிவான எதிர்க்குரல் என அவரது வாழ்க்கையும் திருப்பங்கள் நிரம்பியதுதான். அரசியலில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும் முயன்றார். மக்களோடு இருப்பது, மக்களுக்காக இருப்பது, மக்கள் மொழியே பேசுவது என இயல்பாக மாறியவரை உடல் நலம் பாதித்தது. அவ்வப்போது அதை சரி செய்து அரசியலுக்காக தொடர்ந்து பயணமும், வீதியில் இறங்கி ஜனந்திரள் பாசத்தை சந்தித்ததும் நடந்தது. ஒரு சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.கவின் கூட்டணிக்காக இரண்டு கழகங்களும் அலையாய் அலைந்து திரிந்ததெல்லாம் அரசியல் வரலாறு. அப்படியும் அவர் உடல்நிலை மேலும் நிலைகுலைந்தது. வெளிநாடுகளுக்கு சென்றும் பார்த்த சிகிச்சைகள் மேற்கொண்டு உடல் நலிவடையாமல் மட்டுமே தடுத்தன.
அவர் நிற்பதில் இருக்கிற அசௌகரியங்கள் இப்போது ஓரளவு சரி செய்யப்பட்டு இருக்கின்றன. பேச்சுத்திறன் திரும்ப கைவரப்பெறுவதாக தகவல்கள் சொல்கின்றன. அந்த வெள்ளைச் சிரிப்புக்கு, பெருங் கோபத்திற்கு, இயல்பாக வெடிக்கும் வார்த்தைக்குக் கூட இப்போது ஏங்கி நிற்கிறார்கள் கட்சிக்காரர்கள். அட, நல்ல மனுஷன்யா என்று வித்தியாசம் பார்க்காமல் அத்தனை பேரும் விழுந்தார்… எழுந்தார் என தலைப்பிட்டுப் பேச ஆசைப்படுகிறார்கள்.
விஜயகாந்திற்கு இது புத்துணர்ச்சி வருடமாய் இருக்கட்டும். உதவும் கரங்கள் கொண்டவர் உற்சாகமாய் திரும்பி வரட்டும். கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.