புனே: வெங்காய ஏற்றுமதிக்கான 40 சதவீத வரியை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
புனே மாவட்டம் புரந்தர் தாலுகாவில் நடந்த விழா ஒன்றில் தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “கடந்த சில நாட்களாக நாசிக் பகுதியில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெங்காய உற்பத்திக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். நமது நாட்டிலிருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்துள்ளது. இடுபொருள்களின் செலவுகளை கருத்தில் கொண்டு வெங்காய உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் இன்னும் தேவையான முடிவு எடுக்கப்படவில்லை.
வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,410 வழங்கப்படும் என்றும், ஆண்டுக்கு 2 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. உள்ளீட்டுச் செலவுகளை கருத்தில் கொண்டு வெங்காயத்தின் கொள்முதல் விலையை அரசு உயரத்த வேண்டும். எவ்வாறாயினும் வெங்காய ஏற்றுமதிக்கான 40 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும். நாட்டில் மகாராஷ்டிரா, சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாகும். உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டு பிரேசிலில் ஏற்பட்ட வறட்சியால் அங்கு சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால் நம் நாட்டிலுள்ள சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு சாதகமான ஒரு வாய்ப்பு உருவானது. அவர்கள் சர்க்கரை ஏற்றுமதி செய்ய தீர்மானித்தனர். ஆனால் மத்திய அரசு தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு வருகிறது. அப்படி நடந்தால் எந்த ஒரு மாநிலமும் கரும்புக்கு சிறப்பான விலை கொடுக்க முடியாது” இவ்வாறு சரத் பவார் பேசினார்.