`ரூ.10 லட்சம் கோடி யூரியா மானியம்; யாருக்கு?' விவசாயிகளின் பதில் இதுதான்!

சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தனது உரையில், விவசாயிகளுக்கு யூரியா மானியமாக ரூ.10 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், உலகளவில் 3,000 ரூபாய் விலையுள்ள ஒரு மூட்டை யூரியாவை குறைந்த விலையில் ரூ.300-க்கு விவசாயிகளுக்கு மானியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து விவசாய பிரதிநிதிகளிடம் பேசினோம். தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டரிடம் பேசியபோது, “உப்பை மலிவான விலையில் அரசு மானியமாகக் கொடுப்பதால் யாரும் உப்பைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். அதுபோல யூரியாவை மானியமாக 300 ரூபாய்க்கு கொடுப்பதால், விவசாயம் வளர்ந்துவிட முடியாது.

நல்லா கவுண்டர்

விவசாயத்திற்கு யூரியா முக்கியம் இல்லை. இது பயிர்களின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு உதவுமே ஒழிய விளைச்சலை அதிகப்படுத்துகின்ற வேலையை செய்யாது. பயிர் விளைச்சலுக்குத் தேவையான டி.ஏ.பி என்றழைக்கப்படும் டை அமோனியம் பாஸ்பேட் (DAP ), காம்ப்ளக்ஸ் என்றழைக்கப்படும் கலப்பு உரங்கள், பொட்டாஷ் போன்ற உரங்கள், பயிர்கள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு இந்த உரங்கள் உதவும். இது போன்ற உங்களுக்கு மானியம் கொடுக்காமல், யூரியாக்கு மட்டும் மானியம் கொடுப்பதால் என்ன பலன்?

பயிர்களுக்குத் தேவையான மற்ற உரங்கள் 800 ரூபாய்,1400 ரூபாய் , 2000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. யூரியா மட்டும் 270, 300 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பெரிய பலன்கள் இல்லை.

விவசாயம்

விவசாயம் பற்றி தெளிவில்லாத, சிந்தனையில்லாத அதிகாரிகள் கொடுக்கிற யோசனையை வைத்து இது போன்று மானியம் கொடுக்கிறது அரசு. இதுவொரு பித்தலாட்டமான செயல். வருடத்திற்கு ஒரு விவசாயிக்கு 6,000 ரூபாய் வங்கி கணக்கில் போடப்படும் என்று கூறினார்கள். மானியம் என்பது உரக்கடைகளுக்கு , அதிகாரிகளுக்கு லாபமாக இருக்குமே ஒழிய விவசாயிகளுக்கு அதனால் எந்த ஒரு லாபமும் இல்லை. யூரியா போட்ட பிறகு பயிர்களுக்கு தண்ணீர் அதிகமாக விட வேண்டும். இல்லையென்றால் பயிர்கள் கருகி விடும். யூரியா போடாத பயிர் தண்ணீர் இல்லையென்றால் 10 நாட்களுக்கு கூட தாக்குப்பிடிக்கும். யூரியா போட்டால் அத்தனை நாட்களுக்குப் பலன் இருக்காது.

ஒரு பக்கம் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று கூறும் மத்திய அரசு, மறுபக்கம் யூரியாவிற்கு மானியத்தை அள்ளி வழங்குகிறது. மானியம் என்பது உரக்கம்பெனிகளுக்கு லாபமாக இருக்குமே ஒழிய விவசாயிகளுக்கு ஒரு போதும் பயனுள்ளதாக இருக்காது “என்று கூறினார்.

இது குறித்து பேசியபோது தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் கூறுகையில், “இந்த அறிவிப்பு புதிதல்ல. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டதைதான் பிரதமர் நரேந்திர மோடி மறுபடியும் சுதந்திர தினத்தன்று கூறியுள்ளார். ஆனால் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று கூறியது பாராட்டத்தக்கது. இந்தியாவிலேயே சிக்கிம் மாநிலம் தான் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயம் செய்து வருகிறது. 2020 லேயே இதைப் பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் கூறியுள்ளோம்.

சுவாமிமலை சுந்தர.விமல்நாதன்

ஆனால், இப்போது தேர்தலை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் மறு அறிவிப்பு செய்கிறார்கள். இது தேர்தலுக்கான முன்னெடுப்பாகவும் , அரசியல் லாபத்தோடுதான் பிரதமரின் பேச்சு இருந்துள்ளது. அப்படி, உண்மையிலேயே இருந்திருந்தால் 6.2.2016 இல் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று உத்தரப் பிரேதேச மாநிலத்தில் நடைபெற்ற உழவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். ஆனால் அதுவே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, இந்த அறிவிப்பை அரசியல் நோக்கத்திற்காக மட்டும் எடுத்துக் கொள்ளலாமே ஒழிய விவசாயிகளின் நலனுக்கானது என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.