‘சதி வேலை காரணமா?’ – மதுரை ரயில் விபத்தை முழுமையாக விசாரிக்க முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்துக்கு சமூக விரோதிகளின் சதி வேலைகள் காரணமா என்பதை மிகுந்த கவனத்துடன் முழுமையாக விசாரிக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அதன் மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “உத்தரப் பிரதேசம் லக்னோவில் இருந்து தனி ரயில் பெட்டி ஏற்பாடு செய்து தமிழ்நாடு வந்த சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டியில் இன்று (26.08.2023) அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் வரை மரணமடைந்துள்ளதும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் பெரும் வேதனையளிக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் தனிப்பட்ட முறையில் பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் எப்படி அனுமதிக்கப்பட்டது. அந்த எரிவாயு சிலிண்டரும் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2002 பிப்ரவரி 27 கோத்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையும் அதனைத் தொடர்ந்து நடந்த துயரம் மிகுந்த சம்பவங்களும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தென்னக ரயில்வே தலா ரூபாய் 10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும் ஆறுதல் அளிக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த தீ விபத்துக்கு சமூக விரோதிகளின் சதி வேலைகள் காரணமா என்பதை மிகுந்த கவனத்துடன் முழுமையாக விசாரிக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.