உ.பி: ஆசிரியை கூறியதால் இஸ்லாமிய மாணவனை கன்னத்தில் அறைந்த சக மாணவர்கள்; அதற்குபிறகு நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச பள்ளியொன்றில், ஆசிரியை அடிக்கச் சொன்னதன் பேரில், சக மாணவன் ஒருவனை மாணவர்கள் வரிசையாக கன்னத்தில், முதுகில் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகத் தொடங்கியது. அந்த வீடியோவில், 2-ம் வகுப்பு படிக்கும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மாணவன் வாய்ப்பாடு சரியாகச் சொல்லாததால், த்ரிப்தா தியாகி எனும் ஆசிரியை மாணவர்களை அழைத்து, அந்த இஸ்லாமிய மாணவனை அடிக்கச் சொல்கிறார். அப்போது சில மாணவர்கள் வரிசையாக வந்து மாணவனின் கன்னத்திலும், முதுகிலும் அடித்தனர். மாணவர்கள் அடிக்கும்போது, இஸ்லாமிய மாணவனின் மதத்தைச் சுட்டிக்காட்டிய ஆசிரியை, இந்த மதத்தின் பெண்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டாததுதான், கல்வியில் இந்த மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் என்று கூறினார்.

ஆகஸ்ட் 24-ல் நடந்த இந்த சம்பவம் பெரும் பூதாகரமாக வெடிக்கவே, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறையிடம் கூறியதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு, ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகக் குழந்தை உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

இதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாட்டின் விஷத்தை விதைப்பது, பள்ளி போன்ற புனித இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது என ஒரு ஆசிரியரால் இதைவிட மோசமான எதுவும் இந்த நாட்டுக்குச் செய்ய முடியாது. இதே மண்ணெண்ணையைத்தான் பா.ஜ.க-வினர் பரப்பி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீக்கிரையாக்கியிருக்கின்றனர். குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம், அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக அன்பைக் கற்பிக்க வேண்டும்” என்று ட்வீட் செய்திருந்தார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை, “பள்ளி நிர்வாகத்துடன் சமரசத்துக்கு வந்திருப்பதால், பள்ளி மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த மாட்டேன். அதோடு, இனி இந்தப் பள்ளிக்கு என் மகனை அனுப்புவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பள்ளி நிர்வாகமும் கட்டணத்தைத் திருப்பித் தந்துவிட்டது. இந்த விஷயத்தை இனி தொடர விரும்பவில்லை” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து எம்.பி ஒவைசி, “கடந்த ஒன்பது ஆண்டுகளின் (பா.ஜ.க-வின் ஆட்சி) தயாரிப்புதான், இஸ்லாமிய மாணவனை அறையும் இந்த வீடியோ. இதிலிருந்து வெளிப்படும் செய்தி என்னவென்றால், முஸ்லிமை எந்தப் பின்விளைவுகளும் இல்லாமல் அடிக்கலாம், அவமானப்படுத்தலாம். தனக்கு நீதி கிடைக்காது என்பதால், மாணவனின் தந்தை இனி இதைத் தொடர விரும்பவில்லை என்றார். யோகி ஆட்சியில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. ஆசிரியர் தண்டிக்கப்படுவதைக் காட்டிலும் ஏதாவது அரசாங்க விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ஆசிரியை த்ரிப்தா தியாகி

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியை த்ரிப்தா தியாகி, “அந்த மாணவனிடம் கண்டிப்பாக இருக்குமாரு மாணவனின் பெற்றோரிடமிருந்து அழுத்தம் வந்தது. நான் மாற்றுத்திறனாளி, அதனால், மாணவர்களை அடிக்கச் சொன்னேன். இனியாவது வீட்டுப் பாடத்தை செய்வான் என்றுதான் அப்படிச் செய்தேன். மாணவனின் உறவினர் கூட அப்போது வகுப்பில் தான் இருந்தார். அவர் தான் வீடியோவை பதிவுசெய்தார். என்னுடைய தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்தப் பிரச்னை தேவையில்லாமல் பெரிய பிரச்னையாக மாற்றப்பட்டது. இது ஒரு சிறிய பிரச்னை என்று அரசியல்வாதிகளிடம் நான் கூற விரும்புகிறேன். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ட்வீட் செய்திருக்கின்றனர். ஆனால், இதைப் பற்றி ட்வீட் செய்யுமளவுக்குப் பெரிய விஷயமல்ல. இது போன்ற தினசரி பிரச்னைகள் வைரலாக்கப்பட்டால் ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிப்பார்கள்” என்று கூறினார்.

இருப்பினும், மாணவனின் பெற்றோர் இன்று காலை புகாரளித்திருப்பதாக முசாபர்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் அரவிந்த் மல்லப்பா பங்கரி தெரிவித்தார். அந்த புகாரில், சுமார் இரண்டு மணிநேரம் தன் மகன் சித்ரவதைக்குள்ளானதாகத் தந்தை தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த விவகாரத்தில் ஆசிரியை மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருப்பதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரவிந்த் மல்லப்பா பங்கரி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், அந்த மாணவனை அடித்த சக மாணவன் ஒருவன், பாதிக்கப்பட்ட மாணவனை கட்டித்தழுவும் வீடியோ வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.