வேலு தாஸ் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.
அண்ணாதுரை தயாரிக்கும் இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்திருக்கிறார். வரும் செப்டம்பர் 1-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது கடந்த கால அனுபவங்கள் குறித்து விமல் பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இசைவெளியீட்டு விழாவில் பேசிய விமல், “நிறையப் பேர் ஏன் உங்களது படம் அடிக்கடி வருவதில்லை என்று கேட்கிறார்கள். ஆண்டவன் புண்ணியத்தில் இப்போது நிறையப் படங்களில் நடித்து வருகிறேன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/99665320.webp.jpeg)
இனிமேல் என்னுடைய நிறையப் படங்கள் வெளியாகும். இப்போதெல்லாம் நிறையக் கையெழுத்துகள் போடுவதில்லை. சினிமாவுக்கு வந்த தொடக்கத்தில் படம்தானே என்று நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டேன். அதற்கெல்லாம் சேர்த்து வைத்துக் கிடைத்தது. என்னை வைத்து படம் எடுக்கலாமா எனப் பலரும் தயங்கும் அளவிற்குக் கடந்த மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.
அந்தச் சமயத்தில் என்னை நம்பி வந்த படம்தான் இந்த ‘துடிக்கும் கரங்கள்’. சொல்லப்போனால் லாக்டௌன் சமயத்தில் எனக்குக் கைகொடுத்த படமும் கூட. இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்கிற தகவல் பரவியதால்தான் எனக்கு ‘விலங்கு’ உள்ளிட்ட இன்னும் சில பட வாய்ப்புகள் தேடி வந்தன” என்று பேசிய அவர், ரோபோ சங்கர் பற்றியும் பேசியிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/63f5b3b5dfe90.jpg)
“ரோபோ சங்கரைப் பார்த்து பலரும் திருந்திவிட்டார்கள். பலரும் உடல்நலத்தில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நானும் மது அருந்தி 45 நாள்களாகிவிட்டன. திருந்தி விட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.