தமிழக அரசியல் வரலாற்றை திரைப்படத்தையும் அதனது வலிமையையும் விலக்கிவிட்டு எழுதிவிட முடியாது.
காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு மறைந்த ஜெயலலிதா வரை சினிமாவின் தாக்கம் அரசியலில் இருந்திருக்கிறது. இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. இதில் மக்களின் யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கவில்லை என்று திரைத்துறையை விட்டு விலகி நின்ற காமராஜர், பெரியார் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் கூட சுயசரிதையாக வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் தமிழக அரசியலில் முக்கிய ஆளுமையாக இருந்த தியாகி கக்கனின் வரலாறும் இப்போது படமாக்கப்பட்டுள்ளது.
நினைவிழந்த நிலையில் இருக்கும் கக்கன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகப் படம் ஆரம்பமாகிறது. அதற்கடுத்ததாக செய்தி குறிப்பில் அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை வரிசையாகச் சொல்வது போல காட்சிகள் நகர்கிறது. காட்சிக்கு காட்சி திரைக்கதைக்கான எந்த சிரத்தையும் எடுக்காதது அப்பட்டமாக தெரிய, அதீத நாடகத்தன்மை எட்டிப்பார்க்கிறது. பொதுவாக சிறந்த வாழ்க்கை வரலாற்று படங்களில் இருக்கும் யதார்த்த கதையோட்டத்தை இதில் காண முடியவில்லை.
கக்கனாக நடித்துள்ள ‘ஜோசப் பேபி’ இப்படத்தை எழுதி,இயக்கி, தயாரித்துள்ளார். இத்தகைய நேர்மையான ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை எடுக்க நினைத்ததற்குப் பாராட்டலாம். ஆனால் வசன உச்சரிப்பு, உடல் மொழி, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என நடிகராக எந்த இடத்திலும் தனது பணியைச் சிறப்பாகச் செய்யவில்லை. இளம் வயது கக்கனாக நடித்துள்ள நபரும் கொடுக்கப்பட்ட வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போன்றே இருக்கிறது. இதில் வைத்தியநாத அய்யர் மற்றும் காமராஜர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் சற்று நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். இது போக எம்.ஜி.ஆர், காந்தி போன்ற தலைவர்கள் கதாபாத்திரங்களாக வந்து போகிறார்கள்.
கக்கனுடைய வாழ்க்கை வரலாறு நீண்ட அரசியல் நிகழ்வுகளையும், சமூக நிகழ்வுகளையும் கொண்டிருக்கிறது. அதில் சுதந்திர போராட்டத்தில் நிகழ்ந்த மனித அவலங்களையும், அவரது சொந்த வாழ்வில் நடந்த உறவுச் சிக்கல்களையும் வெளிக்காட்ட முயற்சித்திருக்கிறார் ஜோசப் பேபி. ஆனால் அதை நேர்த்தியாக அல்லது சுமாரான திரைவடிவமாக மாற்றுவதில் கூட தோல்வியையே அடைந்துள்ளார். பல இடங்களில் சுமாரான குறும்படத்தை விட மோசமான திரைமொழியாகவே வெளிப்படுகிறது. இருப்பினும் கக்கனின் லஞ்சம் வாங்காத நேர்மையையும், காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்ட உணர்வையும், பட்டியலின மக்களோடு கோயில் பிரவேசம் செய்த முக்கிய நிகழ்வுகளை திரையில் கொண்டு வர முயற்சித்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
கக்கனின் முழுமையான வாழ்க்கை வரலாறு என்று சொல்லப்படும் இப்படத்தில், அவரது வாழ்வின் மிக முக்கிய நபரான வைத்தியநாத அய்யரின் பெயர் பெரிதாக பதிய வைக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், விவசாயத்துறை, பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, உள்துறை அமைச்சர் என பல்வேறு பதவியில் இருந்தவர் கக்கன். ஆனால் இப்படத்தில் அவர் என்ன பதவி வகித்து இருந்தார் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. விவசாயத் துறையில் இரண்டு புதிய நீர்நிலைகளை உருவாக்கியது, ஆதிதிராவிட மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தது, காவல்துறையினருக்குத் தனியாகப் பயிற்சி பள்ளி தொடங்கியது போன்ற வரலாற்று சம்பவங்களை ஆவணப்படுத்தவில்லை.
தேவாவின் பின்னணி இசை மூலம் படம் முழுக்கப் பயணம் செய்திருக்கிறார். இருப்பினும் காட்சிகளில் வலு இல்லாததாலும், நடிப்பும் பெரிதாக சோபிக்காத நிலையில் இசையை ரசிக்க முடியவில்லை. படத்தொகுப்பு ஒளிப்பதிவு ஆகியவற்றை சிறப்பாக செய்து அந்த காலத்திற்கு நம்மை கூட்டி செல்லாமல், தொழிநுட்பத்தை மோசமாக கையாண்ட விதத்தில் பல ஆண்டுகள் பின்னோக்கி பார்க்க வைத்திருக்கிறார்கள். இம்மாதிரியான வாழ்க்கை வரலாற்று படங்களின் முதுகெலும்பே கலை இயக்கத்தை பொறுத்து தான் அமையும். `பட்ஜெட் கம்மி’ என்று கூறினாலும் வண்டியின் நம்பர் பிளேட் தவறாக வைத்தது, தமிழ்நாட்டு வரைபடத்தினை சுதந்திரத்துக்கு முன்னால் வரும் காட்சியில் வைத்தது எனும் கவனக்குறைவுகளைத் தவிர்த்து இருக்கலாம். பல இடங்களில் வசன உச்சரிப்பும் டப்பிங்கும் பொருத்தமற்ற நிலையிலே இருக்கிறது. நீங்கள் படம் பார்த்திருந்தால் இது மட்டும் தான் பிரச்னையா? என்று கேட்கத் தோன்றலாம்.
ஒட்டுமொத்தமாக எளிமையாக வாழ்ந்த ஒரு அரசியல் ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு பாராட்டுக்கள். இருந்தும் கலை படைப்பிற்கு அது மட்டும் போதாது.
கலையை அதன் நேர்த்தியோடு, அதற்கான வடிவத்தோடு, குறைந்தபட்ச அழகியலோடு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு படைப்பாளிகளுக்கு இருக்கிறது. அதை கக்கன் படக்குழுவினர் செய்ய தவறியுள்ளனர்.