ஃப்ளோரிடா: அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் உள்ளது ஜாக்சன்வில்லே எனும் பகுதி. இங்குள்ள டாலர் ஜெனரல் கடையில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 கறுப்பின நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து ஜாக்சன்வில்லே ஷெரீப் டி.கே.வாட்டர்ஸ் கூறுகையில், ”இந்த தாக்குதல் முழுக்க முழுக்க இன வெறுப்புக் குற்றமாகும். சந்தேக நபர் வெள்ளை இனத்தவர். அவருடைய அடையாளம் தெரியவில்லை. உயிரிழந்த மூவரும் கறுப்பினத்தவர். இவர்களில் ஒருவர் பெண், இருவர் ஆண் ஆவர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தற்கொலை செய்து கொண்டர் நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பில் அவர் ஊடகங்கள், பெற்றோர் மற்றும் நீதித்துறைகளுக்கு தனக்குள்ள கறுப்பின வெறுப்பு குறித்து நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார்.
மேலும், அந்த நபர் AR-15 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். கும்பல் வன்முறைகளின்போது பெரும்பாலான குற்றவாளிகள் இந்த ரக ரைஃபிலை தான் பயன்படுத்துகின்றனர். அந்த நபரின் வெறுப்பு இதயத்தை நொறுக்குகிறது” என்றார்.