பிரான்சில் வினோதம்; கூடுதல் உற்பத்தியான ஒயினை அழிக்க அரசு ரூ.1,782 கோடி ஒதுக்கீடு

பாரீஸ்,

கொரோனா பெருந்தொற்று பரவலால் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. இதன்பின்பு மெல்ல, அதில் இருந்து மீட்சியடைந்தபோது, உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது, எரிபொருள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதனால், வளர்ந்த நிலையிலான ஐரோப்பிய நாடுகள், வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாடுகள் உள்பட பல உலக நாடுகள் திணறின. நாடுகளுக்கு வேண்டிய உணவு தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பசி, பட்டினி போன்ற நிலைக்கு தள்ளப்பட கூடும் என உலக நாடுகள் வேதனை தெரிவித்தன.

இதன் தொடர்ச்சியாக மக்கள் தங்களுடைய உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை பொருட்களுக்கு செலவிட்டு வருகின்றனர். ஒயின் குடிப்பது போன்ற ஆடம்பர விசயங்களில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர்.

ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நடப்பு ஆண்டு ஜூன் வரையிலான கணக்கெடுப்பின்படி, இத்தாலி (7 சதவீதம்), ஸ்பெயின் (10 சதவீதம்), பிரான்ஸ் (15 சதவீதம்), ஜெர்மனி (22 சதவீதம்) மற்றும் போர்ச்சுகல் (34 சதவீதம்) ஆகிய நாடுகளில் ஒயின் நுகர்வு சரிவடைந்து காணப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல், ஊரடங்கு அமல், உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மத்தியில் ஐரோப்பிய நாடான பிரான்சும் உள்ளது. அந்நாட்டில் ஒயின் உற்பத்தி ஆலைகள் சமீபத்திய காலங்களில் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றன.

ஒயினுக்கான தேவை குறைந்து காணப்படுகிறது. மக்களில் பலர் ஒயினில் இருந்து பீர் குடிப்பதற்கு மாறி வருகின்றனர். இதனால், ஒயின் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியாக கூடுதாக உற்பத்தியான ஒயினை அழிக்க உதவுவதற்கு பிரான்ஸ் அரசு முன்வந்துள்ளது. இதற்காக ரூ.1,782.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியானது, ஒயின் உற்பத்தியாளர்கள், ஆலிவ் வளர்ப்பு உள்ளிட்ட மாற்று பொருட்களுக்கான உற்பத்தியில் ஈடுபடவும், ஒயின் விலை சரிவை நிறுத்தும் நோக்கிலும், உற்பத்தியாளர்கள் மீண்டும் வருவாயை பெறும் வகையிலும் உதவியாக இருக்கும்.

எனினும், கூடுதல் உற்பத்தி செய்யப்பட்ட ஒயினை வாங்கவும், அவற்றை அழித்து, அதில் இருந்து பெறப்படும் ஆல்கஹாலை எடுத்து, தூய்மைப்படுத்தும் பொருட்கள், சானிடைசர்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தவும் இந்த நிதி பயன்படும் என அரசு தெரிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.