தேசிய நல்லாசிரியர் விருதுக்கு அலங்காநல்லூர் அரசப் பள்ளி ஆசிரியர் தேர்வு

மதுரை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு மதுரை மாவட்ட அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் (வயது 49) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானோர் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதுமிருந்து 50 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதில், தமிழகத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.மாலதி ஆகிய இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான விருதை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு செப்.5 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்குகிறார். இவர்களுக்கு வெள்ளிப்பதக்கம், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், உடற்கல்வி ஆசிரியரோடு, தேசிய மாணவர் படை அலுவலராகவும் உள்ளார். மேலும், கிராமப்புற மாணவர்களை என்சிசி, பல வகை விளையாட்டுகளில் பங்கேற்கச்செய்து மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளார். புதிய வகை விளையாட்டுகளை மாணவர்களிடம் அறிமுகப்படுத்தி கிராமப்புற மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளார்.

டேக்வாண்டோ, குத்துச்சண்டை, வாள் சண்டை, காஃப்பால் உள்பட பலவகை விளையாட்டுகளை மாணவர்களிடம் புகுத்தி அவர்களது திறன்களை வளர்த்துள்ளார். மேலும் பள்ளிச்சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காகவும் பணியாற்றியுள்ளார்.தேசிய விருதுக்கு தேர்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா உள்பட கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.