மிமிக்ரி கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிப்பவர் நடிகர் சிவக்கார்த்திகேயன்.
அட்லி இயக்கிய ‘முகநூல்’ எனும் குறும்படத்தில் ஜாலியாக நடித்த சிவகார்த்திகேயன் பாண்டிய ராஜின் ‘மெரினா’, தனுஷுடன் ‘3’ என காமெடி நடிகராக நடித்து எழிலின் ‘மனம் கொத்திப் பறவை’ மூலம் கதாநாயகான அறிமுகமானார். அதன்பின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர் நீச்சல்’, ‘வருத்தப்படாத வலிபர் சங்கம்’ எனப் பல படங்களில் ரசிகர்களைக் கவர்ந்து இன்று ‘டாக்டர்’, மாவீரன்’ எனத் திரைத்துறையில் பாக்ஸ் ஆபிஸில் குதிரையாக ஓடத்தொடங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் பட ரிலீஸென்றால் இளம் ரசிகர்கள் மட்டுமல்ல ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் கொண்டாடமாகிவிடும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
2010ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஆர்த்தியைக் கரம் பிடித்தார். அவர்களுக்கு அராதனா, குகன் தாஸ் என இரண்டு அழகான குழந்தைகள். இன்றுடன் அவர்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாளன்று ஒவ்வொரு முறையும் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை சிவக்கார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்வது வழக்கம். அவ்வகையில், இன்றும் அதே சிரிப்புடன், அன்புடன் இந்நாளில் ‘சந்தோஷ கண்ணீரே…’ என்ற கேப்ஷனுடன் இருவரும் ஒன்றாக செஃல்பி எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் சிவா. வாழ்த்துகள் சிவா – ஆர்த்தி