புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியில், ” 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர். இண்டியா கூட்டணியில் உள்ள 26 எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. தீவிர ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என்றார். இறுதியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியின் அவசியத்தைப் பற்றி, ஒவ்வொரு தேர்தலிலும் சில உள்ளூர் காரணிகள் கவனம் பெற்று ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இப்போது நாடு முழுவதுமே ஒருவித அழுத்தம் உருவாகியுள்ளது. அதுதான் 26 கட்சிகளை ஒருங்கிணைத்துள்ளது.
பிரதமர் மோடி இன்னும் ஆணவத்துடனேயே இருக்கக் கூடாது. 2014-ல் அவர் ஆட்சிக்கு வந்தபோது 31 சதவீதம் வாக்குகளையே அவர் பெற்றிருந்தார். மீதமுள்ள 69 சதவீத வாக்குகள் அவருக்கு எதிராகவே இருந்தன. கடந்த மாதம் பெங்களூருவில் இண்டியா கூட்டணி ஆலோசனை நடத்தியபோது தேசிய ஜனநாயக கூட்டணி பயந்துவிட்டது.
2024 தேர்தலில் 50 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெறுவோம் என்று மோடி வேண்டுமானால் நம்பிக்கை தெரிவிக்கலாம் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. மோடி புகழின் உச்சியில் இருந்தபோதே அவரால் 50 சதவீத வாக்குகளைப் பெற இயலவில்லை. எனவே 2024 தேர்தலில் இந்த சதவீதம் இன்னும் குறையவே செய்யும். 2024 தேர்தல் முடிவுகள் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும்.
ஒரு ஜனநாயகத்தில் எதிர்காலத்தைப் பற்றி ஆரூடம் கூறுவதுபோல் வெற்று கணிப்புகளைக் கூறுவது சாத்தியமே இல்லை. ஆனால் மோடியின் பேச்சுக்கள் அனைத்தும் அப்படித்தான் உள்ளன. பிரதமர் மோடி நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டார். ஆனால் அவை என்னவானது என்பது மக்களுக்குத்தான் தெரியும்.
சந்திரயான்-3 வெற்றிக்கு பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தியும் காரணம். அவர்களின் கடின உழைப்பின் பலனே இன்றைய வெற்றிகள். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் ஆலோசனைகளுக்கு செவிமடுத்து நேரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். அதற்கு இஸ்ரோ எனப் பெயர் சூட்டியவர் இந்திரா காந்தி ஆவார்” என்றார்.