சென்னை: தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் மாலதிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானோர் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதுமிருந்து 50 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதில், தமிழகத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.மாலதி ஆகிய இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான விருதை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு செப்.5 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்குகிறார். இவர்களுக்கு வெள்ளிப்பதக்கம், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.