சத்ரபதி சாம்பஜிநகர்: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் உரிய சாலை வசதி இல்லாததால் உயிரை பணயம் வைத்து தெர்மகோல் படகில் மாணவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்லும் அவலநிலை உள்ளது.
இதுகுறித்து மாணவர் பிரஜக்தா கூறுகையில், “ஒளரங்காபாத் மாவட்டத்தின் பிவ் தனோரா கிராமத்தைச் சேர்ந்த நானும், எனது நண்பர்கள் 15 பேரும் நீர்த்தேக்கத்தின் குறுக்கே உள்ள நீர்பிடிப்பு பகுதியை கடந்து தினமும் பள்ளி செல்வதற்கு தெர்மகோல் படகைத்தான் பயன்படுத்தி வருகிறோம். போகும் வழியில் தண்ணீர் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தெர்மகோல் படகில் ஏறுவதை தடுக்க மூக்கில் குச்சிகள் அல்லது தற்காலிக துடுப்புகளை உடன் எடுத்து செல்கிறோம். ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது” என்றார்.
பிரஜக்தாவின் தந்தை விஷ்ணு கோலே கூறும்போது, “ஜெயக்வாடி அணையால் எங்களது கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 47 ஆண்டுகளாக உரிய போக்குவரத்து வசதி எங்கள் கிராமத்துக்கு செய்யப்படவில்லை. இதனால், நாங்கள் படிப்பறிவு இல்லாமல் ஆகிவிட்டோம். எங்கள் நிலைமை, எங்களது பிள்ளைகளுக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே விஷ பாம்புகள் உள்ள தண்ணீரில் தெர்மகோல் படகை பயன்படுத்தி தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகிறோம்” என்றார்.
சத்ரபதி சாம்பஜி நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பிவ் தனோரா கிராமம். இந்த கிராமம், ஜெயக்வாடி அணை, சிவனா நதி, லாஹுகி நதி ஆகியவற்றால் மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த நிலையில், அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லவேண்டும் என்றால் சேற்று நிலத்தில் 25 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையே உள்ளது. எனவே, ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல ஆண்டுகளாக உயிரை பணயம் வைத்து தெர்மகோல் படகில்தான் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கிராம நிர்வாக அதிகாரி சவிதா சவான் கூறுகையில், “இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
இந்த பிரச்சினை குறித்து மகாராஷ்டிர சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. எம்எல்சி சதீஷ் சவான் இந்தப் பிரச்னையை எழுப்பிய போது, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “பருவமழை காலத்தில் நீர் மட்டம் அதிகரிப்பதால் கிராமம் பிளவுபடுவதே பிரச்சினைக்கு காரணம்” என்றார்.