தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு: தமிழகத்தில் 2 ஆசிரியர்கள் தேர்வு

சென்னை: தமிழகத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து தகுதியான 50 பேர் விருதுக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரப் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். கூடுதல் விவரங்களை nationalawardstoteachers.education.gov.in/ எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வானவர்களுக்கு செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தமிழக அரசு சார்பில் 385 ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு விருதுக்கு தகுதியானவர்களை இறுதிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணி முடிவடைந்த பிறகு வரும் செப்டம்பர் 1-ம் தேதி பட்டியல் வெளியாக உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.