புதுச்சேரி: மருத்துவப் படிப்பில் அமல்படுத்த உள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ‘அரசுப் பள்ளி’ என்பதை தெளிவாக வரையறை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்தப்பட உள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ‘அரசு பள்ளி’ என்பதை தெளிவாக வரையறை செய்து, திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, போர்க்கொடி உயர்ந்துள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பி, அதன் முடிவுக்காக காத்திருக்கிறது.
இத்சூழ்நிலையில், இந்த திட்டத்தின் நோக்கம் சரியாக நிறைவேற வேண்டும்மென்றால் ‘அரசுப் பள்ளி’ என்பதை சரியாக வரையறை செய்து, இந்த இட ஒதுக்கீட்டினை முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
குழப்பம்
அரசுப் பள்ளி என்றால், மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, புதுச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளி, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளையும் சேர்த்தே குறிக்கின்றது.
அப்படி, இருக்கும்போது, மருத்துவ படிப்பில் அமல்படுத்தப்பட உள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பொருந்துமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/gallerye_081320238_3416007.jpg)
எச்சரிக்கை மணி
இந்த மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு குறிப்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டினை சேர்த்து அமல்படுத்தினால், புதுச்சேரி அரசு கொண்டு வர உள்ள இட ஒதுக்கீட்டின் நோக்கமே கேலி கூத்தாகிவிடும் என்றும் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் கல்வியாளர்கள்.
மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டிப் போட முடியவில்லை என்று தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க நினைக்கின்றோம்.
ஆனால் கேந்திரியா வித்யாலயா பள்ளியை சேர்த்து இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தினால், அந்த மாணவர்களுடன் போட்டிபோட முடியாமல், மாநில அரசு பள்ளி மாணவர்கள் கண்டிப்பாக மருத்துவ சீட்டுகளை இழக்க நேரிடும்.
தனியார் பள்ளியிலாவது புதுச்சேரி மாணவர்கள் படிக்கின்றனர். தனியார் பள்ளி மாணவர்கள் மருத்துவ சீட்டுகளை பெற்றாலும் கூட, அது புதுச்சேரி மண்ணிற்கே கிடைத்ததுபோலாகி விடும்.
ஆனால்,கேந்திரியா வித்யாலயா பள்ளியை அரசு பள்ளி இட ஒதுக்கீட்டில் இணைத்தால், பிற மாநிலங்களில் இருந்து மாற்றலாகி வந்த, மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகளிடம், மாநில அரசு பள்ளி மாணவர்கள் சீட்டுகளை இழக்க நேரிடும். அதாவது பிற மாநில மாணவர்களுக்கு, புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களின் சீட்டுகள் சென்றுவிடும் அபாயம் உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் ஓரிரு புதுச்சேரி மாணவர்களுக்காக ஒட்டுமொத்த மாநில அரசுப் பள்ளி மாணவர்களின் சீட்டையும் தாரை வார்ப்பது சரியாக அணுகு முறையாக இருக்காது. எனவே அரசு பள்ளி என்பதை சரியாக வரையறை செய்து, 10 சதவீத இட ஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும்.
எப்படி பறிபோகும்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதுச்சேரி மாணவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் படித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு பள்ளிகளை 10 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்த்தால், புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு தான் பெரிதும் பாதிப்பு ஏற்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளி நல்ல கல்வி கிடைத்து வரும் சூழ்நிலையில், புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 37 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளையும் தட்டி பறித்துவிடுவர். இதனால், மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கேள்விக்குறியாகி விடும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்