மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள பிவ் தனோரா என்ற கிராமத்தைச் சேர்ந்த கிராம மாணவர்களுக்கு, தினமும் பள்ளிக்குச் செல்வதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஜெயக்வாடி அணை கட்டப்பட்டபோது, நிலைநீர் (Backwater) பிவ் தனோரா கிராமத்தை இரண்டு பகுதியாகப் பிரித்துவிட்டது.
இக்கிராமத்தின் மூன்று பகுதியையும் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல, ஆற்று சேற்று மண்ணில் நடந்து 25 கிலோமீட்டர் செல்லவேண்டும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/103103061.webp.jpeg)
எனவே இங்குள்ள குழந்தைகள் ஒரு கிலோமீட்டர் ஆற்று நீரை கடந்து சென்று படிக்கின்றனர். அவர்கள் ஆற்றைக் கடக்க, படகு வசதிகூட கிடையாது. தெர்மோகோல் மூலம் செய்யப்பட்ட சீட் ஒன்றை படகு போன்று மாற்றி அதில் அமர்ந்து கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.
ஆற்றுத்தண்ணீரில் ஏராளமான தண்ணீர் பாம்புகள் இருப்பதுண்டு. தெர்மோகோல் சீட்டில் ஆற்றை கடந்து செல்லும்போது அடிக்கடி பாம்புகள் அதன் அருகில் வருவதுண்டு. அவற்றை அடித்து விரட்ட மாணவர்கள் கையில் கம்போடு பயணம் செய்கின்றனர்.
தெர்மோகோல் சீட் மூலம் தினமும் பள்ளிக்குச் செல்லும் ஒரு மாணவியின் தந்தை விஷ்ணு காலே இது குறித்து கூறுகையில், ’என்னைப்போன்று என் குழந்தைகளும் படிப்பறிவு இல்லாமல் இருக்கக்கூடாது என்று நினைத்தேன்.
தெர்மோகோல் சீட் மூலம் ஆற்று நீரை கடந்து என் மகனும், மகளும் பள்ளிக்குச் செல்கின்றனர். தண்ணீரில் பாம்புகள் இருப்பதால் இப்பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1200_675_19308236_203_19308236_1692459822787.jpg)
அணை கட்டப்பட்ட 47 ஆண்டுகளாக இந்த நிலைதான் நீடித்து வருகிறது. இம்மாணவர்கள் சென்று படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரா இது குறித்துக் கூறுகையில், “மாணவர்கள் நினைத்து பார்க்க முடியாத ஒரு பயணத்தை மேற்கொள்கின்றனர். நான், சில மாதங்களுக்கு முன்புதான் இங்கு வந்தேன். ஆனால் இங்குள்ள ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக மாணவர்கள் இதே போன்றுதான் பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்தனர். கடுமையான சீதோஷ்ண நிலையிலும் மாணவர்கள்
தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வருகின்றனர்’ என்று தெரிவித்திருக்கிறார். இக்கிராமத்தைச் சுற்றி நான்குபுறமுமே அணையும், ஆறும் ஓடுகிறது. இக்கிராமத்தின் ஒரு புறத்தில் ஓடக்கூடிய ரஹுகி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என்பது இக்கிராம மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இக்கிராம பஞ்சாயத்து தலைவர் சவிதா சவான் கூறுகையில், ’ரஹுகி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளோம். அது குறித்த முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693210449_340_1200_675_19308236_203_19308236_1692459822787.jpg)
உள்ளூர் தாசீல்தார் சதீஷ் சோனி கூறுகையில், ’ஜெயக்வாடி அணை கட்டப்பட்டபோது கிராம மக்கள் அனைவருக்கும் மாற்று இடம் கொடுக்கப்பட்டது. சில குடும்பத்தினர் தங்களது விவசாய நிலம் இங்கு இருப்பதால் கிராமத்திலேயே தங்கிக்கொள்வதாகத் தெரிவித்தனர். இதனால்தான் அவர்களின் குழந்தைகள் இன்னலுக்கு ஆளாகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் தாசில்தார் கூறுவதை கிராம மக்கள் மறுத்துள்ளனர். அணை கட்டியபோது அரசுதான் தங்களுக்கு இங்கு இடம் ஒதுக்கியதாகவும், ஆனால் அதற்கு ஆவணங்கள் இல்லை என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். இப்பிரச்னை சட்டமன்றத்தில் கூட எழுப்பப்பட்டது. மழைக்காலத்தில் தண்ணீர் அதிகரிக்கும்போது கிராமம் இரண்டாகப் பிரிந்துவிடுகிறது என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்தார். ஆனால் பாலம் கட்டுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.