சீயோல்: கதிர்வீச்சு அபாய அச்சத்தால் தென் கொரியாவில் கடல் உணவை சாப்பிட மக்கள் தயக்கம் காட்டும் சூழலில், இதனால் அந்நாட்டு கடல் உணவு விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை அந்நாட்டு அரசு சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கதிர்வீச்சு அபாய அச்சத்தால் தென் கொரியாவில் கடல் உணவை சாப்பிட மக்கள் தயக்கம் காட்டும் சூழலில், இதனால் அந்நாட்டு கடல் உணவு விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது ஏற்கெனவே ஜப்பானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. புகுஷிமா அணு உலையை சுற்றியுள்ள கடல்நீரில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சீன சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தென் கொரிய மீன் வியாபாரிகள் கடும் நட்டத்தை சந்தித்துள்ளனர். பல்வேறு அறிவியல் தரவுகளை சுட்டிக் காட்டினாலும் கூட மக்கள் கடல் உணவை தவிர்ப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். 92.4 சதவீத கொரிய மக்கள் கடல் உணவை உட்கொள்வதைப் படிப்படியாகக் குறைக்கப் போவதாகக் கூறுகின்றனர். “இது ஒரு தனிநபரின் தொழில் முடங்குமோ என்ற அச்சம் அல்ல; ஒட்டுமொத்த கடல் உணவு வியாபார தொழிலும் முடங்கும் அபாயம்” என்று தென் கொரியாவில் மிகப் பெரிய கடல் உணவுச் சந்தையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.
சர்ச்சையின் பின்னணி: ஜப்பான் நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிகப் பெரிய சுனாமி அலைகளால் புகுஷிமா அணு உலைக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அணு உலையின் மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் சேதமடைந்தன. இந்த பாதிப்பை சரிசெய்ய குளிரூட்டும் அமைப்புக்குள் கோடிக்கணக்கான லிட்டர் கடல்நீர் மற்றும் போரிக் அமிலம் செலுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட கதிரியக்க கழிவு நீர் ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேமிக்கப்பட்ட அந்த கழிவு நீரைத்தான் கடும் எதிர்ப்புகளை மீறி தற்போது ஜப்பான் அரசு கடலில் வெளியேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.