உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்திய செஸ் விளையாட்டின் முகமாகவே மாறியிருக்கிறார் பிரக்ஞானந்தா.
இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடி, நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வியடைந்திருந்தாலும் வெள்ளி பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்திருக்கிறார். பலரும் அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவரை பாராட்டி சிலர் பதிவிட்டிருந்த ட்விட்டுகளை ரீ ட்வீட் செய்து நன்றியைத் தெரிவித்து வருகிறார்.
அந்தவகையில் போட்டியின்போது, பிரபல புகைப்படக் கலைஞரான மரியா எமேலியநோவா பிரக்ஞானந்தாவுடனும், அவரின் தாயாருடன் இணைந்து செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அதில்,”லெஜண்டுடனும் அவரது மகனுடன் செல்பி எடுத்துக்கொண்டேன்” என்று பதிவிட்டிருந்தார். ‘லெஜண்ட்’ என்று தனது தாயைக் குறிப்பிட்டிருந்த அந்தப் பதிவினை பிரக்ஞானந்தா ‘caption’ என்று குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் ரீ ட்வீட் செய்திருக்கிறார்.
தற்போது அந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரக்ஞானந்தாவின் வெற்றியில் அவரது தாயின் பங்கு மிகப்பெரியது. சிறுவயதிலிருந்தே தன் மகனுக்காக ஸ்பான்சர் கேட்பது, அவருடன் செஸ் விளையாட்டில் உறுதுணையாக இருப்பது என அவரின் தாயைப் பற்றி பலருக்கும் அறிமுகம் உண்டு. உலகக்கோப்பை செஸ் விளையாட்டுப் போட்டிக்காக இந்தியாவில் இருந்து கிளம்பியது முதல் இறுதிச்சுற்றில் பங்குபெற்றதுவரை அவருடன் உறுதுணையாகக் கூடவே இருந்தது அவரின் தாயார் நாகலட்சுமிதான். அவரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். தன் மகனைப் பெருமிதத்துடன் பார்க்கும் நாகலட்சுமி அம்மாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. பிரக்ஞானந்தாவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும். Praggnanandhaa: தாயின் கனவு; சச்சினின் பாராட்டு; சூழலை வென்ற திறமை; பிரக்ஞானந்தாவின் கதை!