மட்டக்களப்பில் நிலவும் கடும் வறட்சி! பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்தும் குடி நீர் விநியோகம்!!

நாட்டில் நிலவும் கடும் வறட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை காலமும் இம்மாவட்டத்தில் மழைவீழ்ச்சி எதுவும் கிடைக்கப் பெறாததால் வரட்சியான காலநிலை தெடர்ந்து நிலவுகின்றது. இதனால் மாவட்டத்தின் 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8,892 குடும்பங்களைச் சேர்ந்த 29,508 நபர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி செங்கலடி பிரதேச செயலக பிரிவில் 2,561 குடும்பங்களைச் சேர்ந்த 8,805 நபர்கள் அதிக பட்சமாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலக பிரிவில் 2,161 குடும்பங்களைச் சேர்ந்த 6,856 நபர்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 1,729 குடும்பங்களைச் சேர்ந்த 6,300 நபர்களும், போரதீவுப்பற்று வெல்லாவெல் 1,438 குடும்பங்களைச் சேர்ந்த 4341 நபர்களும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் 853 குடும்பங்களைச் சேர்ந்த 2681 நபர்களும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 525 நபர்களும் வறட்சியால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் ஆலோசனைக்கு இணங்க தேசிய அனர்த்த நிவாரண சேவை திணைக்களத்தினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.