“மாமனிதன் திரைப்படத்திற்குத் தேசிய விருதில்லை; ஏன் இந்த பாகுபாடு" – மாணிக்கம் தாகூர் கேள்வி

தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாமனிதன்’.

யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளியானது.

சீனு ராமசாமி

பெரும்பாலும் எளிய மனிதர்களின் கதைகளை கையில் எடுக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, இப்படத்திலும் ஒரு சாமானியனின் கதையைத் திரையில் படரவிட்டிருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தனர்.

இத்திரைப்படம் சர்வதேச அளவில் நடைபெறும் 29வது ‘Sedona International Flim Festival’ விருது விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம் ‘Inspirational Feature Flim’ என்ற விருதினை வென்றிருந்தது. இதுதவிர பல்வேறு சர்வதேச விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விருதுகளையும் வென்றிருந்தது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24ம் தேதி) 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பல திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படாததில் ஏன் என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அவ்வகையில் சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ படத்திற்கு தேசிய விருது வழங்கபடாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “உலகம் முழுவதும் 52 விருதுகளைப் பெற்ற தமிழ்த் திரைப்படமான ‘மாமனிதன்’ க்கு தேசிய விருது பாகுபாடு காட்டியுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான உண்மை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது அனுராக் தாக்கூர் அவர்களே.

சமூக நல்லிணக்கத்தைக் கொண்டாடும் தமிழ்த் திரைப்படத்திற்கு ஏன் இதுபோன்ற பாகுபாடுகளைக் காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.