"என்ன ஓபி அடிச்சிட்டு இருக்கீங்க".. போய் வேலைய பாருங்க.. அரசு மருத்துவரை விரட்டிய மா. சுப்பிரமணியன்

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அங்கு ஒரு அறையில் அமர்ந்திருந்த மருத்துவரை விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று கன்னியாகுமரியில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நுழைந்தார் மா. சுப்பிரமணியன். அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் சென்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். அப்போது சில வார்டுகளும், மருத்துவ உபகரணங்களும் போதிய பராமரிப்பின்றியும், செயல்படாமலும் இருப்பதை கண்டு கடும் கோபம் அடைந்தார் மா. சுப்பிரமணியன். பின்னர் இதுதொடர்பாக மருத்துவமனை டீனை அழைத்து விசாரணை நடத்திய அமைச்சர், அவரது பதிலில் திருப்தி இல்லாததால் அவரை உடனடியாக பணியிடமாறுதல் செய்யுமாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிக்கு போனில் உத்தரவிட்டார்.

இப்படி கோபமாக பேசிவிட்டு அமைச்சர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனையில் ஒரு அறையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை பார்த்த அமைச்சர், “தம்பி.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க. இங்க வாங்க” எனக் கூப்பிட்டார். அமைச்சரை பார்த்ததும் வெலவெலத்து போன அந்த மருத்துவர், என்ன சொல்வது எனத் தெரியாமல் அப்படியே நின்றார்.

அப்போது அமைச்சர், “இது எந்த வார்டுனு தெரியுமா.. இன்டர்நெட்டுக்கு அடிமையானவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கான வார்டு. டியூட்டி டைம்ல நீங்க இங்கே உட்கார்ந்துட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. ஓபி அடிச்சிட்டு இருக்கீங்களா. போய் டியூட்டிய பாருங்க” என சற்று அதட்டலாகவும், புன்முறுவலுடனும் சொன்னார் அமைச்சர். பிறகு அமைச்சர் அங்கிருந்து சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.