நூஹ் :வன்முறை வெடித்ததால், ஹரியானா மாநிலம் நூஹ் பகுதியில், வி.எச்.பி.,யின் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, 51 பேர் மட்டும் கோவிலில் ஜலாபிஷேகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு குருகிராமில், ஜூலை 31ல், வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலம் நடந்தது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நுாஹ் பகுதியை ஊர்வலம் அடைந்தபோது, ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும், கலவரக்காரர்கள் துப்பாக்கி சூடும் நடத்தினர்.
இதில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இரண்டு போலீசார், பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். கலவரத்தில் வாகனங்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில், தாங்கள் திட்டமிட்ட ஊர்வலத்தை தொடரப் போவதாக வி.எச்.பி., அறிவித்திருந்தது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. தடையை மீறி, ஊர்வலத்தை நேற்று நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனால், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில், ஊர்வலத்தை கைவிட்டு, நூஹ் பகுதியில்உள்ள கோவிலில் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தும்படி, வி.எச்.பி., அமைப்புக்கு, முதல்வர் மனோகர் லால் கட்டார் வலியுறுத்தினார்.இதை ஏற்று, 51 பேர் மட்டும் நூஹ் பகுதியில் உள்ள கோவிலில் ஜலாபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப் பாதுகாப்புடன், வி.எச்.பி., மூத்த தலைவர் அலோக் குமார் தலைமையில், 51 பேர் நூஹ் பகுதி வழியாக நடந்து சென்று கோவிலை அடைந்தனர்.
உள்ளூர் மக்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் முன்னிலையில், ஜலாபிஷேகம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்