![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/NTLRG_20230828162049350214.jpg)
ஆன்லைன் ரம்மி : ஷாரூக்கானுக்கு எதிராக போராட்டம்
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் உள்ள ஷாரூக்கான் வீட்டின் முன்பு ஒரு அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். காரணம், ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தும் ஒரு படத்தில் தற்போது ஷாருக்கான் நடித்து வருகிறாராம். அதன் காரணமாகவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைப்பினர் ஷாரூக்கான் வீட்டு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
இந்த அமைப்பின் தலைவர் கிருஷ்ண சந்திரா அடல் என்பவர் மீடியாக்களிடம் கூறுகையில், இன்றைக்கு இளைய தலைமுறையினர் ஆன்லைன் ரம்மியை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் ஏராளமான பணத்தை இழக்கிறார்கள். சிலர் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஆன்லைன் ரம்மி செயலியை சினிமா பிரபலங்கள் விளம்பரப்படுத்துவதால் அது போன்ற விளையாட்டுகளில் அதிகமான இளைஞர்கள் மூழ்கி போகிறார்கள். அதன் காரணமாகவே ஆன்லைன் ரம்மி செயலியை விளம்பரப்படுத்துவதில் ஷாருக்கான் போன்ற பிரபலங்கள் ஈடுபடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.