கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் செயல்படும் நீட், ஜேஇஇ பயிற்சி மையங்களில் வழக்கமான தேர்வுகள் நடத்த 2 மாதங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இங்கு நேற்று முன்தினம் ‘நீட்’ மாணவர்கள் இருவர் தற்கொலை செய்துககொண்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகம் உள்ளன. பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து பயிற்சி பெறுகின்றனர்.
இந்நிலையில் இங்கு ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த அவிஷ்கர் என்ற 16 வயது மாணவர் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பயிற்சி மையத்தில் வாராந்திர தேர்வுக்கு பிறகு அவர் இம்முடிவுக்கு வந்ததாக போலீஸார் கூறினர்.
இதுபோல் பிஹாரை சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் (18) என்பவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வாராந்திர தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் காரணமாக அவர் இம்முடிவுக்கு வந்தார். இதன் மூலம் இந்த ஆண்டு கோட்டா மாவட்டத்தில்
தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து கோட்டாவில் செயல்படும் அனைத்து பயிற்சி மையங்களும் வழக்கமான தேர்வுகளை 2 மாதங்களுக்கு நடத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கு வதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு மாணவர்களிடையே தற்கொலை அதிகரித்து வருவதை தொடர்ந்து அது குறித்து ஆராய்வதற்காக முதல்வர் அசோக் கெலாட் கடந்த வாரம் ஒரு குழுவை அமைத்துள்ளார். குழு தனது அறிக்கையை வெகு விரைவில் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, மாணவர் தற்கொலையை தடுக்க விடுதிகளில் ஸ்பிரிங் பொருத்தப்பட்ட மின் விசிறிகளை பொருத்த வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டது.