பெங்களூரு,
‘நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் – 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா – எல் 1 விண்கலம், செப்., 2ம் தேதி காலை 11:50 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும்’ என, இஸ்ரோ அறிவித்து உள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் – 3 விண்கலம் சமீபத்தில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான ‘ஆதித்யா – எல் 1’ விண்கலம் செலுத்தப்பட உள்ளதாக, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து, செப்., 2ம் தேதி காலை 11:50 மணிக்கு செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ நேற்று அறிவித்தது. இந்த விண்கலம், பி.எஸ்.எல்.வி., – சி – 57 ராக்கெட் வாயிலாக அனுப்பப்பட உள்ளது.
இது, நான்கு மாதங்கள் பயணம் செய்து, பூமிக்கும், சூரியனுக்கும் இடைபட்ட, எல் 1 என்றழைக்கப்படும், ‘லாக்ரேஞ்ச் பாயின்ட்’ எனப்படும் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்தப் பகுதியில் தான், இழுப்பு விசை மற்றும் எதிர்ப்பு விசை சமமாக இருக்கும். இதனால், அதிக எரிபொருள் தேவைப்படாமல், விண்கலம் நிலையாக நின்று ஆய்வு செய்ய முடியும்.
சூரியனில் ஏற்படும் நெருப்பு புயல், கதிர்வீச்சின் அளவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. குறிப்பாக, சூரியனின் மேற்பகுதி, 6,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையுடன் உள்ளது.
ஆனால், அதன் கண் எனப்படும் மையப் பகுதியில், பல லட்சம் டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை காணப்படுகிறது. இதற்கான காரணத்தை ஆதித்யா ஆராய உள்ளது.
இதற்காக உள்நாட்டிலேயே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள ஆய்வுக் கருவிகள், தொலைநோக்கிகளை சுமந்து ஆதித்யா பயணம் மேற்கொள்ள உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்