நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் ஊராட்சியில் இருக்கிறது செல்லிபாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37). இவர் கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு இவருக்கு, பிரேமா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி அதிகாலையில் செல்லிப்பாளையம் பகுதியில் ஒரு வளைவில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி பெரியசாமி இறந்ததாகவும், பிரேமா காயமின்றி தப்பியதாகவும் கூறப்பட்டது. பெரியசாமியின் உறவினர்களும் இதை விபத்து என்று முதலில் நம்பியதால், இந்த சம்பவம் தொடர்பாக மோகனூர் காவல் நிலைய போலீஸார் விபத்து என்று வழக்கு பதிவு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இருந்தாலும், மோகனூர் காவல் நிலைய போலீஸார் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பிரேமாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், `தனக்கு நள்ளிரவில் காதில் வலி ஏற்பட்டதாகவும், மோகனூரில் உள்ள மருத்துவனைக்கு செல்ல கணவரை அழைத்து சென்றதாகவும்’ கூறினார். அப்போது, நடந்த விபத்தில் பெரியசாமிக்கு இறப்பு ஏற்படும் அளவுக்கு காயம் ஏற்பட்டள்ளதாகவும், தான் காயமின்றி தப்பியதாகவும் பிரேமா கூறிய தகவல் போளிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், தொடர்ந்து பிரேமாவின் நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்து வந்தனர். அப்போது, பிரேமா தனது கணவர் இறந்த துக்கம் பெரிதாக எதுவும் இன்றி, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டனர்.
பெரியசாமியின் உறவினர்களும், கணவர் இறந்த துக்கம் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் பிரேமாவின் நடவடிக்கை குறித்து, போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால், போலீஸாரின் சந்தேகம் வலுக்கவே, பிரேமாவை தங்கள் பாணியில் விசாரணை செய்தனர். அப்போது, பிரேமா தனது கணவர் பெரியசாமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பெரியசாமியின் மனைவி பிரேமா, வீட்டில் இருக்க போர் அடிப்பதாக கூறி, அருகில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அப்போது, அங்கு வேலை செய்த ஒரு நபருடன், கடந்த 4 மாதங்களாக பிரேமாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் திருமணம் உறவு தாண்டிய நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த பெரியசாமி, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், பிரேமா தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, அந்த பேக்கரியில் இருந்து பிரேமாவையும், அவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்த இளைஞரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டனர். அதன்பிறகு பிரேமா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். செல்போனில் மட்டுமே அந்த இளைஞருடன் பிரேமா பேசி வந்தார். நேரில் சந்திக்க முடியாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் கோபமான பிரேமா, அந்த இளைஞரிடம், ‘நாம் முன்புபோல் தனிமையில் சந்திக்க முடியாததற்கு காரணம் என்னோட கணவர்தான். அவர் உயிருடன் இருக்கும் வரை நம்மால் தனிமையில் சந்திக்க முடியாது. அதனால், அவரை கொலை செய்தால் மட்டுமே, நம்மால் பழையபடி பழகமுடியும்’ என்று கூறியுள்ளார்.
அதற்கு, அந்த இளைஞரும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி இருவரும் போட்ட பிளான்படிதான், சம்பவம் நடைபெற்ற அந்த இரவில் தனக்கு காது வலிக்கிறது என்று பிரேமா கணவரிடம் கூறவும், அவரும் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே இருவரும் திட்டமிட்டப்படி மோகனூர் செல்லும் வழியில் ஒரு வளைவில் பெரியசாமி பிரேமாவுடன் சென்றபோது, அங்கு மறைந்தபடி பிரேமாவோடு திருமணம் மீறிய உறவில் இருந்த இளைஞர் நின்று கொண்டிருந்தார். அவர், பெரியசாமி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன்பிறகு, உறவினர்களிடம் சென்று வாகனம் ஒன்று மோதி கணவர் இறந்து விட்டதாக பிரேமா கண்ணீர் மல்க கூறி, அவர்களை நம்ப வைத்தார். இதற்கிடையில், பெரியசாமியை கொலை செய்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதற்கிடையில், பெரியசாமியை கொலை செய்த பிரேமாவையும், அவரோடு திருமணம் மீறிய உறவில் இருந்த நந்திகேசவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தவறான உறவுக்காக தனது கணவனையே இளம்பெண் ஒருவர், தன்னோடு திருமணம் தாண்டிய உறவில் இருந்த இளைஞரோடு சேர்ந்து கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY