வேலூர் ‘ஜோஸ் ஆலுக்காஸ்’ நகைக்கடையில், கடந்த 15-12-2021 அன்று அதிகாலை சுவர் துளையிடப்பட்டு, ரூ.8 கோடி மதிப்பிலான 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தனது மாறுவேடத்தைக் களைத்து, அந்தப் பொருள்களை நகைக்கடையின் பின்புறப் பகுதியிலேயே தீயிட்டு எரித்துவிட்டு, தப்பிச்சென்றான். இதில், ‘கர்லிங் ஸ்டைல் விக்’ மட்டுமே எரியாமல் போலீஸாரின் கைக்குக் கிடைத்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தபோது, மெலிந்த உடல் தோற்றம்கொண்ட கொள்ளையன் ‘சிங்க முகமூடி’ அணிந்துகொண்டு வந்து, கேமராக்களில் ஸ்பிரே அடிப்பதும், தெளிவாக பதிவாகியிருந்தது.
திருச்சி ‘லலிதா ஜுவல்லரி’ நகைக்கடை கொள்ளை வழக்கைப்போன்றே இந்த வழக்கின் விசாரணையையும் போலீஸார் நகர்த்திச் சென்றனர். இதையடுத்து, மிகக் கடினமாக புலன் விசாரணை செய்து, கொள்ளையனையும் அடையாளம் கண்டு கொத்தாகத் தூக்கினர். விசாரணையில், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் டீக்காராமன் எனத் தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை சுடுகாட்டில் புதைத்துவைத்திருந்தான்.
போலீஸார், மொத்த நகைகளையும் மீட்டு, கொள்ளையன் டீக்காராமனை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-4ல் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கொள்ளையன் டீக்காராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுப்பவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, டீக்காராமனை பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றிசென்று, வேலூர் சிறையில் போலீஸார் அடைத்தனர். ஜாமீனில் வெளி வர முடியாத வகையில் குண்டர் சட்டத்தில் சிறையிலேயே டீக்காராமனை போலீஸார் அடைத்துவைத்திருந்தனர். இந்த நிலையில், டீக்காராமன் ஏற்கெனவே ஓராண்டு 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டதால், எஞ்சிய ஓராண்டு 4 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தால் போதுமானது எனக் கூறப்படுகிறது. அதேசமயம், நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோதும், தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு சிறைக்கு அழைத்துசெல்லப்பட்டபோதும், தண்டனை கிடைத்துவிட்டதே என்ற சோகமும், வருத்தமும் இல்லாமல் சிரித்த முகத்துடனேயே இருந்தான் கொள்ளையன் டீக்காராமன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY