விஜயபாஸ்கரை நெருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை: மனைவியோடு கோர்ட்டில் ஆஜர்!

திமுக அமைச்சர்களை குறிவைத்து மத்திய அரசின் அமலாக்கத்துறை காய் நகர்த்தி வரும் நிலையில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகள் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது.

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. அதனால் திமுக அரசு அதிமுக மாஜிக்கள் மீது உடனடியாக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. ஆனால் கொரோனா அலை ஓய்ந்த பின்னர் அடுத்தடுத்து மாஜி அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 35 கோடியே 79 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய், அதாவது 54 சதவீதம் சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதற்கு மறுநாள் அக்டோபர் 18ஆம் தேதி விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்கள் என மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளி,

136 கனரக வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் மற்றும் 19 ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி விஜயபாஸ்கருக்கு எதிராக 216 குற்றப்பத்திரிக்கை, 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 800 சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அப்போது விஜயபாஸ்கர் மட்டும் ஆஜராகியிருந்தார்.

இன்று நடைபெற்ற விசாரணையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவரும் ஆஜராகினர். அப்போது நீதுபதி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் பல வழக்குகள் பதியப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்தாலும் இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.