புதுடில்லி, ஆகம விதிகளுக்கு புறம்பாக, கோவில்களில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்படுவதற்கு தடை கேட்டு தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில், 2020ல் தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. மேலும், நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக விதிமுறைகளையும் உருவாக்கியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்தாண்டு ஆக., மாதத்தில் உத்தரவு பிறப்பித்தது.
‘கோவில் பணியாளர் நியமனம் தொடர்பாக, 2020ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகள், ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு பொருந்தாது’ என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஜே.பி.பர்த்திவாலா அடங்கிய அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விசாரணை, செப்., 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மனுக்களில் கூறப்பட்டு உள்ளதாவது:
உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில், ஆகம விதிகளுக்கு உட்பட்டே, கோவில்களில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஆகம விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கோவில் களுக்கு இது பொருந்தாது என்று கூறியுள்ளது.
இதைப் பயன்படுத்தி, ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்களிலும் புதிய நியமனங்கள் செய்யப்படுவதுடன், பணியிட மாற்றமும் செய்யும் வாய்ப்பு உள்ளது. ஓர் ஆகம விதிக்குட்பட்ட கோவிலில் உள்ளவர்களை, மற்றொரு ஆகம விதிக்குட்பட்ட கோவில்களுக்கு மாற்றுவதை ஏற்க முடியாது. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
அதனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்