வடலூரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை சட்டப் போராட்டத்தின் மூலம் பெறுவோம்: அன்புமணி

சென்னை: ”கடலூரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை விதிப்பதா? அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, கடலூரில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை திடீரென தடை விதித்திருப்பதும், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது பாமக மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மக்களை பாதிக்கும் சிக்கல்கள் குறித்து பொதுக்கூட்டம் நடத்துவதற்குக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறைகளை அரசு கட்டவிழ்த்து விடுவது ஜனநாயகப் படுகொலை ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு, 34 ஆண்டுகள் நிறைவடைந்து 35-ஆம் ஆண்டு தொடங்கி உள்ளது. அதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் நாளை (ஆகஸ்ட் 30) மாலை பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான எல்லா ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், எந்த காரணமும் இல்லாமல், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று நேற்று காலை கடலூர் மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளது. கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்குக் கூட அனுமதி மறுப்பது நியாயமற்றது.

காவல்துறையின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பாட்டாளி மக்கள் கட்சி மீது அடிப்படை ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகளை தமிழக அரசு முன்வைத்தது. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் கூட்டத்தை விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடத்திக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத பாமக, அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

பொதுக்கூட்டம் நடத்துவதென்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகும். மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்கான சிறந்த வழி பொதுக்கூட்டம் ஆகும். அடக்குமுறை ஆட்சி நடைபெற்ற ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட இந்த உரிமை பறிக்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து பொதுக்கூட்டம் நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி பிரச்சினை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தி விடும் என்று அரசு அஞ்சுவதையே இது காட்டுகிறது.

அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு, பல்வேறு சவால்களை சந்தித்த கட்சியான திமுக, இப்போது என்.எல்.சி நிறுவனத்திற்கு ஏன் அடிமையாகிக் கிடக்கிறது என்பது தான் எனக்கு புரியாத புதிராக உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த அதே வடலூர் நகரில், கடந்த ஜூலை 7-ஆம் நாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதே வடலூர் நகரில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி இன்று காலை நடத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் அனுமதியளிக்கும் காவல்துறை, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மட்டும் அனுமது மறுக்கிறது என்றால், அதன் பின்னணியில் பொது நலன் இல்லை, அரசியலும் காழ்ப்புணர்ச்சியும் தான் இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டால், அதில் என்.எல்.சி விவகாரம் குறித்து பேசப்படும் என்று என்று அரசும், காவல்துறையும் கூக்குரலிடுகின்றன. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி பிரச்சினை மட்டுமல்ல… சிப்காட் சுற்றுச்சூழல் சிக்கல், சைமா சாயப்பட்டறை கழிவு விவகாரம், தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தின் வளமையை பாதுகாப்பது, முந்திரி விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கச் செய்வது, கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடல்நீர் உள்ளே புகும் சிக்கலுக்கு தீர்வு காண தடுப்பணைகளை கட்டுவது, கொள்ளிடம், வெள்ளாறு, திருமணிமுத்தாறு ஆகியவற்றில் தடுப்பணை கட்டுவது, கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவுகளை அமைப்பது உள்ளிட்ட மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என ஏராளமான மக்கள் பிரச்சினைகள் உள்ளன. அவை அனைத்தையும் பற்றி பொதுக் கூட்டத்தில் பேசித் தான் ஆக வேண்டும், அது தான் ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் கடமை.

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் இந்த பிரச்சினைகள் குறித்து கடலூர் மாவட்டத்தில் தான் பொதுக்கூட்டம் நடத்தி பேச வேண்டும். கடலூர் மாவட்டத்தின் இந்த பிரச்சினைகள் குறித்து விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்பது எந்த வகையில் நியாயம்? அதனால் தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்க பா.ம.க. மறுத்திருக்கிறது. இத்தீர்ப்பை மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடலூர் மாவட்ட மண்ணையும், மக்களையும் காக்க பாட்டாளி மக்கள் கட்சி உறுதி பூண்டிருக்கிறது. அதற்காக எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு முறியடிக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. அதன்படி, கடலூர் மாவட்டத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்திலேயே நடத்துவதற்கான அனுமதியை சட்டப் போராட்டத்தின் மூலம் வென்றேடுப்போம்; கடலூர் மாவட்டத்தை பாதிக்கும் என்.எல்.சி உள்ளிட்ட அனைத்து சிக்கல்கள் குறித்தும், அதற்கு திமுக அரசு துணை போவது குறித்தும் முழங்குவோம் என்று உறுதியளிக்கிறேன். அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை அடக்குமுறைகளின் மூலம் பணிய வைக்க முடியாது என்பதை உலகிற்கு நாம் நிரூபிப்போம்.” இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.