பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு, ரேச்சல் ரெபெக்கா, வீரா ஆகியோர் நடித்து ஷான் ரோல்டன் இசையில் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகவிருக்கும் படம் `லக்கி மேன்’.
இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. யோகி பாபு, ரேச்சல், வீரா, அப்துல், ஷான் ரோல்டன் மற்றும் சக படக்குழுவினர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர்.
இதில் பேசிய இயக்குநர் பாலாஜி வேணுகோபால், “20 ஆண்டுகளாக ரேடியோ, டிவி, வாய்ஸ் ஆர்டிஸ்ட், நடிப்பு என எல்லாமே பண்ணியாச்சு. ஆனால் நான் இயக்குநர் என்று கண்டுபிடித்து ‘லக்கி மேன்’ படம் பண்ண இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. யோகி பாபு சாரையும் என்னையும் இணைத்தது ‘முருக பக்தி’தான். அவரிடம் கதை சொல்லி முடிக்கும் போது ‘என் வாழ்கையைத் திரும்பிப் பார்க்குற மாறியான கதை இது. நான் நிச்சயம் பண்ணுறேன்’ என்றார்.
ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது கண்டிப்பா நெகட்டிவாகப் பேச நெறைய பேர் வருவாங்க. ‘யோகி பாபு ஷூட்டிங் வரமாட்டார்! டப்பிங் பேச வரமாட்டார்!’ என்றெல்லாம் என்னைப் பயமுறுத்தினார்கள். ஆனால் நாங்கள் அதையெல்லாம் கேட்டுக்கொண்டே ஷூட்டிங், டப்பிங் எல்லாமே முடித்துவிட்டோம்.
ஒரு நாள் ஷூட் பண்ணும்போது யோகி பாபு சாருக்கு அவர் குடும்பத்தில் ஒரு பயங்கரமான மெடிக்கல் எமர்ஜென்சி. அன்று மூன்று லொகேஷனில் ஷூட் செய்யத் திட்டமிட்டிருந்தோம். இதை விட்டா அடுத்த கால்ஷீட்டுக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
எல்லாரும் வேதனையிலிருந்த நேரம், மதியம் பேக் அப் சொல்லலாம் என்று நினைக்கும்போது அவர் ‘நான் வர்றேன்’ என்று சொல்லி 1.30 மணிக்குத் தொடங்கி 5.30 மணி வரை அத்தனை நெருக்கடிகள் இருந்தும் காமெடியாக நடித்துக் கொடுத்தார்.
யோகி பாபு பற்றித் தவறான கருத்து பரப்பப்பட்டு வருது. தயவுசெய்து அப்படி யாரும் செய்யவேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.