நடிகை வரலட்சுமி சரத்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஐ.ஏ நோட்டீஸ் அனுப்பியதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
கேரளா விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக கைதான ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் உதவியாளர் என்பதால் வரலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை மறுத்து என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு நோட்டீஸ் ஏதும் வரவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை. மற்றும் அவை வெறும் வதந்திகள். அப்படி எந்த ஒரு சம்மனும் எனக்கு அனுப்பப்படவில்லை. நேரில் ஆஜராக வேண்டும் என்ற எந்த கோரிக்கையும் வரவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரிலான்ஸ் மேலாளராக ஆதிலிங்கம் என்னிடம் பணியாற்றினார்.
இந்தக்காலக்கட்டத்தில் நான் மேலும் பல ஃப்ரிலான்ஸர்களுடன் ஒரேநேரத்தில் பணியாற்றினேன். பணியில் இருந்து அவர் சென்ற பின்பு இன்றுவரை எங்களுக்குள் எந்த ஒரு தொடர்பும் இல்லை. உண்மைகளின் அடிப்படையில் தகவல்களை வெளியிடுமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்.” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.