உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி உருவெடுத்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 μg/m3 என்ற காற்றின் தர அளவை மீறினால் அபாயம் என உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்தியாவில் வாழும் 1.3 பில்லியன் மக்கள், உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட மாசு வரம்பை மீறிய பகுதிகளில் வாழ்கின்றனர். அதாவது, மிக அதிகமாக மாசுபட்ட இடங்களில் வாழ்வதாக சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் நாட்டின் மக்கள்தொகையில் 67.4 சதவிகிதம் பேர் இந்தியாவின் தேசிய காற்று தரமான 40 μg/m3 ஐ- தாண்டிய பகுதிகளில் வாழ்கிறார்கள் என்பதையும் அந்த ஆய்வு முடிவு கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள 5 μg/m3 மாசு என்ற வரம்பை மீறினால் நுண்ணிய துகள் காற்று மாசுபாட்டால், சராசரி இந்தியரின் ஆயுட்காலத்தில் 5.3 ஆண்டுகள் குறைகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக மிக அதிக மாசடைந்த நகரமாக இருப்பது டெல்லிதான், அங்கு தற்போது இருக்கும் மாசு அளவு தொடர்ந்து நீடிப்பதால் உலக சுகாதார அமைப்பின் வரம்புக்கு ஏற்ப சராசரியாக டெல்லி மக்கள் தங்கள் வாழ்நாளில் 11.9 ஆண்டுகளை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் குறைந்த மாசடைந்த மாவட்டமாக இருப்பது பஞ்சாபின் பதான்கோட் பகுதிதான். ஆனால் அங்கேயே காற்றின் மாசு, உலக சுகாதார அமைப்பின் வரம்பைவிட ஏழு மடங்கு அதிகமாக உள்ளது. அங்கும் தற்போதைய நிலை நீடித்தால் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்நாளில் 3.1 ஆண்டுகளை இழக்க நேரிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான இந்த மாசுக்கு மனித செயல்பாடுகள் தான் மிக முக்கிய காரணம் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.